டெஹ்ரான்: வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் தங்களுக்கிடையிலான பூசலுக்கு இறுதித் தீர்வு காண்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவாரத்தையைத் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் அணுசக்தித் திட்டம், ஈரான் மீதான அனைத்துலகப் பொருளியல் தடைகளை அகற்றுதல் ஆகியவை தொடர்பில் முடிவெடுப்பது அதன் நோக்கம்.
ஏற்கெனவே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட உடனேயே இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தை தொடங்கும். அது 60 நாள்களுக்கு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து உலகில் எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகியுள்ளது.
லெபனான்
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மூண்ட ஈரான் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை, தென் லெபனான்மீது இஸ்ரேல் மறுபடியும் நடத்திய தாக்குதல் குலைத்தது.
மேஃபாடூன் நகரில் இரு வாகனங்களும் ஷுக்கீன் நகரில் ஒரு வாகனமும் குறிவைக்கப்பட்டதாக லெபனான் அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அந்தத் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
தனது ராணுவ வீரர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்த இடத்துக்கு அருகே சந்தேகத்துக்குரிய வாகனம் அடையாளம் காணப்பட்டதையடுத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. தங்களை நோக்கிப் பாய்ச்சப்பட்ட சில ஏவுகணைகளை முறியடித்ததாகவும் ஏவுகணை பாய்ச்சிய தரப்பின்மீது ஆகாயத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் சொன்னது.
ஈரான் எண்ணெய் விற்க அனுமதி
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே ஈரானை அதன் எண்ணெய், எரிபொருளை விற்பனையைத் தொடங்க அமெரிக்கா அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) இதனைத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஒப்பந்தம் இவ்வாரம் கையெழுத்தானதும் ஈரானிய எண்ணெய் விற்பனை தொடர்பான தடை உத்தரவுகள் விலக்கப்படும் என்றும் அந்த விற்பனைக்கு உதவும் வகையில் வங்கிச் சேவைகள், போக்குவரத்து, காப்புறுதி போன்றவற்றையும் அது உள்ளடக்கும் என்றும் கூறப்படுகிறது.

