டெஹ்ரான்: அளவுக்கதிகமான தண்ணீர்ப் பயன்பாட்டுக்கு எதிராக ஈரானிய அதிபர் மசூட் பெஸெஷ்கியான் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு செய்தால் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஈரான் மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்று அவர் கூறினார். ஈரானின் டாஸ்னிம் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (ஜூலை 31) இதனைத் தெரிவித்தது.
வளங்களை சரியாகக் கையாளாததாலும் அளவுக்கதிகமாக தண்ணீர் பயன்படுத்தப்படுவதாலும் தேவை அதிகம் உள்ள மாதங்களில் ஈரானில் பலமுறை மின்சார, எரிவாயு, நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
“டெஹ்ரானில் நாங்கள் சரியாகச் சமாளிக்காவிட்டாலும் தண்ணீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்காவிட்டாலும் செப்டம்பர், அக்டோபருக்குள் அணைக்கட்டுகளில் நீர் இல்லாமல் போய்விடும்,” என்று திரு பெஸெஷ்கியான் சொன்னார்.
ஈரான், கடந்த ஐந்தாண்டுகளாக வறட்சியை எதிர்கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் ஷீனா அன்சாரி தெரிவித்தார். அதோடு, அந்நாட்டில் கடந்த நான்கு மாதங்களில் பெய்த மழையின் அளவு 40 விழுக்காடு குறைந்ததாக வானிலை அமைப்பு குறிப்பிட்டது.
அளவுக்கதிகமான தண்ணீர்ப் பயன்பாடு ஈரானில் பெரும் சவாலாக இருந்துவந்துள்ளது.

