ஈரான் போரால் அமெரிக்க ராணுவத்திற்கு $48 பி. செலவு: நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட அலுவலகம்

ஈரான் போரால் அமெரிக்க ராணுவத்திற்கு $48 பி. செலவு: நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட அலுவலகம்

2 mins read
9c30566f-60d5-4d4d-9583-e52b1b80220b
2026 ஜூலை 6ஆம் தேதி டெஹ்ரானில் போரின்போது கடுமையாகச் சேதமடைந்த ஈரானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம். - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: ஈரானுடனான போரால் ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்க ராணுவத்திற்குக் கிட்டத்தட்ட 48 பில்லியன் வெள்ளி செலவாகியிருப்பதாக நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த மோதல் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கில் கூடுதல் செலவு ஏற்படக்கூடும் என்றும் அது கூறியது.

பிப்ரவரி மாதப் பிற்பகுதியில் ஈரானைக் குறிவைத்து அமெரிக்க - இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு தொடங்கிய போரைச் சுட்டிக்காட்டி, “2026 ஆகஸ்ட் 1 நிலவரப்படி, ஈரானுடனான ஆயுதச் சண்டையால் தற்காப்புத் துறைக்கு ஏறக்குறைய 38 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகியுள்ளது,” என்று அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மேலும், அந்தப் பூசல் தொடர்ந்தால், வன்முறையின் தீவிரத்தைப் பொறுத்து மாதத்திற்கு 2 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் மேல் செலவு அதிகரிக்கக்கூடும் என்றும் அது கூறியது.

போரில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள், இழக்கப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கான செலவு, ராணுவத்திற்கான எரிபொருள் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்கள் பிரதிபலிப்பதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆகஸ்ட் 1ஆம் தேதிவரை பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகளை மாற்றுவதற்கான செலவு 21.7 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சண்டையில் தற்காப்புத் துறைக்கு ஏற்பட்ட செலவினங்களில் இத்தகைய மாற்றீடுகளே மிகப்பெரிய பகுதியாக இருந்துள்ளதாக அலுவலகம் குறிப்பிட்டது.

வரவுசெலவுத் திட்டக் குழுவின் முதன்மை ஜனநாயகக் கட்சி உறுப்பினரான பிரெண்டன் போய்ல், மற்ற ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கோரிக்கையைத் தொடர்ந்து அந்த ஆய்வு தயாரிக்கப்பட்டது.

ஈரான் போர் 37.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவை ஏற்படுத்தியதாக ஜூலை மாதத்தில் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மதிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான் போர்அமெரிக்காசெலவுராணுவம்