ஈரான் போர்: அமைதி ஏற்படுவதில் சிக்கல்

ஈரான் போர்: அமைதி ஏற்படுவதில் சிக்கல்

1 mins read
82d57713-c694-49a2-83b2-cd989c24077e
டெஹ்ரானில் உள்ள என்கிளாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய அமெரிக்க எதிர்ப்பு பதாகையைக் கடந்து செல்லும் ஈரானிய மாது. - படம்: இபிஏ

வாஷிங்டன்/கெய்ரோ: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர், தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி வளைகுடா பகுதியில் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அமைதி ஏற்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை ஈரான் மேலும் நான்கு மாதங்களுக்கு எதிர்கொள்ளும் வலிமையுடன் இருப்பதாக அமெரிக்க மத்திய உளவு அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இதனால், ஈரானைப் பணிய வைப்பதில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய இந்தப் போரால், உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹோர்முஸ் நீரிணைப்பகுதி பெரும் பாதிப்புக்குள்ளானது.

போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டத்திற்கு ஈரானின் பதிலுக்காக உலக நாடுகள் காத்திருக்கின்றன.

அமெரிக்கா ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடக்கும்போது ராணுவ நடவடிக்கையில் இறங்குவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலில் ஈரானிய வணிகக் கப்பல் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஈரான் தனது ராணுவத்திற்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதற்கு உதவிய சீனா, ஹாங்காங்கைச் சேர்ந்த பத்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளியல் தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அனைத்துலக ஆதரவு குறைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை போன்ற அனைத்துலக நீர்வழியை ஈரான் கட்டுப்படுத்துவது ஆபத்தானது என அமெரிக்கா தனது நட்பு நாடுகளை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்