ஈரான் போரால் உணவு உதவி நடவடிக்கைகளில் இடையூறு: மனிதாபிமான குழுக்கள்

ஈரான் போரால் உணவு உதவி நடவடிக்கைகளில் இடையூறு: மனிதாபிமான குழுக்கள்

தேவை ஆக அதிகம் இருக்கும் வேளையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
படம்: ராய்ட்டர்ஸ்

02 Apr 2026 - 6:21 pm

2 mins read

ஈரான் போரால் உலகளவில் மேற்கொள்ளப்படும் உணவு உதவி நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உலக உணவுத் திட்ட அமைப்பு (டபிள்யுஎஃப்பி) செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) கூறியது.

ஏற்கெனவே பசி, உணவுப் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் சமூகங்கள் மேலும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டியது. தற்போது விநியோகச் சங்கிலியில் காணப்படும் இடையூறுகள், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கும் உக்ரேன் போர் தொடங்கிய காலத்துக்கும் பிறகு ஆக மோசமானது என்று அமைப்பின் விநியோகச் சங்கிலிப் பிரிவுத் தலைவர் கொரின் ஃபிளை‌ஷர் கூறினார்.

உதவிக்காக விநியோகிக்கப்படவிருந்த உணவில் சுமார் 70,000 மெட்ரிக் டன் அளவு உணவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சில அளவு உணவு துறைமுகங்களில் சிக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அந்த உணவு, மூன்று மாதங்களுக்கு 800,000க்கும் அதிகமானோர் உட்கொள்ளப் போதுமானது.

டபிள்யுஎஃப்பி, ஹோர்முஸ் நீரிணை வழியாக உணவை விநியோகிப்பதில்லை. இருந்தாலும், மத்திய கிழக்குப் பூசலால் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. அதனால், உலகளவில் கப்பல் பாதைகளில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பதுடன் கப்பல்கள் வேறு பாதையை எடுக்கவேண்டியிருக்கிறது அல்லது நகராமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலை உயர்வு, காத்திருப்பு நேரம் அதிகரிப்பது ஆகிய காரணங்களால் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கச் சம்மேளனம், செங்கதிர் சங்கங்கள் ஆகியவற்றுக்கான ஆசிய பசிபிக் இயக்குநர் அலெக்சாண்டர் மேத்தியூ குறிப்பிட்டார்.

கப்பல் துறையில் பாதைகள் மாற்றிவிடப்படுவது, நெரிசல் ஆகியவற்றின் காரணமாக செலவு 70லிருந்து 300 விழுக்காடு அதிகரித்துள்ளது; நிலவழிப் பயணங்களுக்கான செலவும் சுமார் 50 விழுக்காடு, சில வேளைகளில் 70 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் சிஎன்ஏ ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். கூடுதல் எல்லைகளைக் கடக்கவேண்டியது அதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமானங்களில் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்கான செலவும் அதிகரித்துவிட்டது. அது, தேவை அதிகரித்திருப்பது, எரிபொருள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் 50லிருந்து 70 விழுக்காடு வரை கூடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்உணவு