ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் சவாலான ரமலான் காலத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பலர் போர் குறித்த அச்சத்திற்கு மத்தியிலேயும் நோன்புக் கால கடமைகளைத் தவறாது நிறைவேற்றி நோன்பு துறந்தனர்.
போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நாடுகளில் இருக்கும் இந்தியச் சமூகத்தினரிடையே தமிழ் முரசு பேசியது. வளைகுடா நாட்டில் உள்ளவர்கள் தங்கள் அக்கறைகளைப் பகிர்ந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி சிலர் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
போர்ச் சூழலிலும் நோன்பு துறப்பு
பஹ்ரேனில் வசித்துவரும் இந்திய ஊழியரான திரு பாஷா, 43 நடுவானில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதைப் பார்த்ததாகச் சொன்னார்.
“வழக்கம்போல நாங்கள் பணிக்குச் சென்றோம். எனினும், சில பள்ளிவாசல்களில் நோன்பு துறப்புக் காலத்தில் நடைபெறும் ‘தாராவீஹ்‘ (Taraweeh) பிரார்த்தனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் நாங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பி நோன்பு துறந்தோம்,’’ என்றார் அவர்.
ரமலான் காலத்தில் இந்த நெருக்கடி கடும் சவாலாக இருக்கிறது என்றார் திரு ஃபாரூக், 62. “தவறாமல் செய்திகள் படிக்கிறேன். அவ்வகையில், அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ஜெரால்ட் ஃபோர்ட் வளைகுடா வட்டாரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது கடல்துறையில் பணியாற்றி வரும் இந்திய நண்பர்களின் பயத்தைக் கூட்டியுள்ளது. நிலைமை மோசமடையாமல் இருக்கவும் நோன்புக் கால பிரார்த்தனைகளுக்கு இடையூறு வரக்கூடாது என்றும் தொடர்ந்து இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்,’’ என்றார் அந்த குவைத்வாசி.
தொலைதொடர்பு வசதி முடங்கிவிடுமா?
“உணவு கிடைக்கிறது. ஆனால், தொலைத்தொடர்பு வசதிகளை முடக்கிவிட்டால் குடும்பத்தினருடன் எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை,’’ என்று கலங்கினார் இந்திய ஊழியர் திரு பாலமுருகன், 32. வரும் நாளில் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று அஞ்சுவதாகச் சொன்னார் அவர்.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஓயாது நடத்திவரும் தாக்குதல்களால் அங்குச் செல்லும் விமானங்களை இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் ரத்து செய்துவிட்டன.
விமானச் சேவைகள் முடங்கியுள்ளதால் பயணிகள், குறிப்பாக சுற்றுலா சென்றவர்கள் சிறிதளவு உணவு, குறைந்த அளவிலான தொலைத்தொடர்பு வசதி என்று பேரளவில் அவதியுற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்துப் பேசிய பயண முகவை ஊழியரான திரு சண்முகம், 55 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ‘‘தாயகம் திரும்புவதற்கு விமானப் பயணம் முன்பதிவு செய்ய பலர் தொடர்பு கொண்டுவருகின்றனர். ‘எனினும், வான்வெளித் தாக்குதல்கள் முத்தரப்பிலும் அதிகரித்துவிட்டதால் உடனுக்குடன் முன்பதிவு செய்து தர இயலவில்லை. வருத்தமாக உள்ளது,’’ என்றார்.
“திடீர் தீடீரென்று தோன்றும் புகை மண்டலம், அபாய ஒலியுடன் இயல்பு வாழ்க்கை தொடர்கிறது,’’ என்றார் தமிழ் முரசிடம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) பேசிய திரு சையத், 44.
“தமிழ்நாட்டின் சென்னை, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறோம். நேற்றுவரை தாக்குதல்களால் எழும்பிய தீப்பிழம்புகளைத்தான் பார்த்தோம். ஆனால், இன்று தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதை பற்றிக் கேட்க முடிகிறது. நாளை என்ன நிலைமை என்று தெரியவில்லை.
“வாகனம், கட்டுமானம், விநியோகம் என வெவ்வேறு துறைகளில் பணிபுரிகிறோம்.நிதானமாக இருக்க முயல்கிறோம். ஆனால், கடினமாக உள்ளது,’’ என்று தொலைபேசி உரையாடலை நிறைவுசெய்தார் திரு சையத் .

