ஈரான் போர்: முதல் முறையாக போரை நேரடியாகப் பார்த்த பதற்றத்தில் இந்தியர்கள்

தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் தவிக்கும் பொதுமக்கள் 

ஈரான் போர்: முதல் முறையாக போரை நேரடியாகப் பார்த்த பதற்றத்தில் இந்தியர்கள்

3 mins read
08be2830-ed0e-40d1-9344-2fa272912c44
போர் அபாயம் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பாக இருக்கும்படி அனுப்பப்பட்ட முன்னெச்சரிக்கை குறுஞ்செய்தி - படம்: பாலு
multi-img1 of 2

ஈரான் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பேச்சுவார்த்தைகளும் பல வாரங்களாக நீடித்துவந்தன.

இந்நிலையில், உலகமே எதிர்பாராத வகையில் ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கின.

சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய அந்தத் தாக்குதல்கள் 30 மணிநேரம் கடந்த பிறகும் நீடித்தன. இதனால், போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இந்நிலையில், வளைகுடாவாழ் இந்தியர்களின் நிலையையும் களநிலவரத்தையும் அறிய அங்கு வசிக்கும் இந்தியர்கள் சிலரைத் தமிழ் முரசு தொடர்புகொண்டது.

குவைத், பஹ்ரேன், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் வசித்து வருவோர் கடும் அச்சத்துடன் பேசியதை உணர முடிந்தது. சிலர் பாதுகாப்புக் காரணம் கருதி தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக அபுதாபி, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களைக் குறிவைத்து ஈரானும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியதால் போர் அபாயம் அந்த நாடுகளுக்கும் பரவிவிட்டது.

“அபுதாபியில் பல ஆண்டுகளாகக் குடும்பமாக வசித்து வருகிறோம்.  காலை நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பெருஞ்சத்தம் கேட்டது. ஏவுகணைகள் பாய்ந்து சென்றதைப் பார்க்க முடிந்தது,’’ என்றார் திரு ராமன், 37 (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், அபுதாபியில் நடத்தும் மின்னணு சார்ந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.

‘‘வான்வெளிகளில் விமானம் பறந்ததைத்தான் இதுவரை கண்டதுண்டு. ஆனால், அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்தும் தாக்குதலால் வான்பரப்பில் சீறிச் சென்ற ஏவுகணைகளைப் பார்த்தோம். அவை எங்கு வந்து விழுமோ என்ற பதற்றத்தில் இருக்க வேண்டியுள்ளது. அலுவலக ஊழியர்களுக்கு விடுப்பு அளித்துவிட்டேன்,” என்றார் திரு ராமன்.

சுற்றுலா சென்ற தமிழர்க்கு அதிர்ச்சி

இதற்கிடையே, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுலா சென்ற 70 வயது திரு நடராஜன் முத்துக்கருப்பனும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

அடுத்த விமானப் பயணத்தை எதிர்நோக்கி அபுதாபியில் காத்திருக்கும் சுற்றுலாப் பயணி நடராஜன் முத்துக்கருப்பன், 70.
அடுத்த விமானப் பயணத்தை எதிர்நோக்கி அபுதாபியில் காத்திருக்கும் சுற்றுலாப் பயணி நடராஜன் முத்துக்கருப்பன், 70. - படம்: ராமலிங்கம்

ஞாயிற்றுக்கிழமை துபாய்க்குப் பயணம் செல்லலாம் என்ற எண்ணத்தில் அபுதாபியில் இருந்தபோதுதான் போர் குறித்த தகவல் வந்தது.

‘‘எங்கள் வசிப்பிடத்திலிருந்து சில மைல் தொலைவில் இருக்கும் அல் தஃப்ரா, மஹாவி உள்ளிட்ட இடங்களில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களில் வீசப்படும் ஏவுகணைகள், குண்டுவீச்சின் அதிர்வை உணர முடிகிறது. தற்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன்.

‘‘ஆனால், வான்வெளிகள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டதால் எப்போது இந்தியா செல்ல முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்,’’ என்றார் திரு நடராஜன்.

இதற்கிடையே, பயத்தில் உறைந்துள்ளார் குவைத்தில் தனியார் துறையில் பணியாற்றி வரும் திரு செல்வம், 51.

ஏவுகணைத் தாக்குதல்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே நடத்தப்படுவதால் வளைகுடா நாடுகளில் வசிப்போரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே நடத்தப்படுவதால் வளைகுடா நாடுகளில் வசிப்போரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. - படம்: பார்டா

‘‘எங்களின் கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கைக் குறுஞ்செய்தி வந்தது. அதைப் பார்த்துத்தான் போர் வந்துவிட்டது என்றே தெரிந்தது. சமூக ஊடகங்கள், காணொளி அழைப்புகள் பரவலாக இல்லை. இந்த நிலை நீடித்தால் வேலை போய்விடும். வாழ்க்கை என்னவாகும் என்று அச்சமாக இருக்கிறது’ என்றார் அவர்.

சேவைத் துறையில் பணியாற்றி வரும் திருவாட்டி அனிதாம் 48, உலகச் செய்திகளை உற்றுநோக்கி வருவதாகக் கூறினார்.

‘‘கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. நிகழ்காலத்துடன் பிள்ளைகளின் எதிர்காலமும் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை,’’ என்றார் அவர்.

‘‘உணவும் தண்ணீரும் போதுமான அளவு உள்ளன. அடிப்படைத் தேவைகளுக்குப் பாதிப்பில்லை. மின்சார வசதியும் உள்ளது. ஈரான் போரில் பல்வேறு நாடுகள், குடும்பங்கள் பாதிக்கப்படுவதால் உலகத் தலைவர்கள் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்கள்,’’ என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார் மென்பொருள் துறையில் பணிபுரியும் திரு ஸ்ரீகாந்த், 36.

ஈரான் போர் பரவியுள்ள நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

குறிப்புச் சொற்கள்