தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்பைச் சூதாடி எனச் சாடி எச்சரிக்கை விடுத்த ஈரான்

2 mins read
5200f335-3670-4145-b4a6-778ba84968e2
அமெரிக்கா கடுமையான பதிலடியை எதிர்பார்க்கலாம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. ஈரானில் உள்ள பதாகை ஒன்றில் ‘நாங்கள் அனைவரும் ஈரானின் வீரர்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

இஸ்தான்புல்: தனது அணுவாயுதத் தளங்கள்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து, இஸ்ரேலின் ராணுவத்துடன் கைகோத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒரு சூதாடி என்று ஈரான் சாடியுள்ளது.

ஈரானின் கத்தாம் அல் அன்பியா மத்திய ராணுவத் தலைமையகத்தின் பேச்சாளர் இப்ராகிம் ஸொல்ஃபகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைக்காகக் கடுமையான பதிலடியை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

“சூதாடியான திரு டிரம்ப் இந்தப் போரைத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அதனை முடித்துவைப்பவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்,” என்று திரு ஸொல்ஃபகாரி சூளுரைத்தார்.

வார இறுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஈரானும் இஸ்ரேலும் ஒன்றன்மீது மற்றொன்று வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்தன.

அமெரிக்கத் தாக்குதல் ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்க்கக்கூடும் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

இதனிடையே, இஸ்ரேலிய ராணுவம் திங்கட்கிழமை (ஜூன் 23) மேற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்களைத் தாக்கியதாகத் தெரிவித்தது.

ஈரானில் உள்ள கெர்மன்‌‌‌ஷா பகுதியில் உள்ள ராணுவக் கட்டமைப்புத் தளங்களைத் தனது ஆகாயப் படை தற்போது தாக்கிவருவதாக இஸ்ரேல் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானில் உள்ள அனைத்து அணுவாயுதத் தளங்களும் பெரிய அளவில் சேதமடைந்ததாகத் திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

ஆகப் பெரிய சேதம் நிலத்துக்கு அடியில் ஆழமான இடத்தில் ஏற்பட்டது என்று தமது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் திரு டிரம்ப் கூறினார்.

எனினும், அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னரே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதியை வேறோர் இடத்துக்கு மாற்றிவிட்டதாக ஈரானின் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல்மீது ஈரான் அடுக்கடுக்கான ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அத்தாக்குதலில் டெல் அவிவில் பலர் காயமுற்றதுடன் கட்டடங்களும் அழிந்தன.

எனினும், முக்கியப் பதிலடியாகக் கருதப்படும் அமெரிக்கத் தளங்கள்மீது ஈரான் இன்னும் தாக்குதல் நடத்தவில்லை. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துலக எண்ணெய்க் கப்பல்கள்மீது 20 விழுக்காடு வரியையும் ஈரான் செலுத்தக்கூடும்.

அவ்வாறு அது செய்தால் அனைத்துலக கச்சா எண்ணெய் விலை வானளவிற்கு உயர்வதோடு, உலகப் பொருளியலை ஆட்டங்காண வைக்கும்.

குறிப்புச் சொற்கள்