வாஷிங்டன்: இதுவரை உலகம் காணாத அளவு ஈரானின் பொருளியல் தனிமைப்படுத்தப்படும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு அம்சங்களில் அது செயல்படுத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார். நிதித் துறையில் அழுத்தம் தருவதும், ஈரானின் துறைமுகங்களை நேரடியாக முடக்குவதும் அமெரிக்காவின் திட்டம் என்று அவர் தெரிவித்தார்.
அந்த நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
நியூஸ்மேக்ஸ் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அமெரிக்க நிதி அமைச்சர் கருத்துரைத்தார். பொருளியல் ரீதியாகத் தடைகள் ஏற்படுத்துவதோடு, ஈரானின் துறைமுகங்கள் தொடர்ந்து முடக்கப்படும் என்பதால் அந்நாட்டிற்குள் எதுவும் நுழையவோ வெளியேறவோ முடியாது என்றார் அவர்.
அடுத்த சில வாரங்களில் அதிகத் தகவல்களை எதிர்பாருங்கள் எனவும் திரு பெசன்ட் குறிப்பிட்டார்.
முன்னதாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், எண்ணெய், பெட்ரோல் விலைகளை அமெரிக்கர்களுக்குக் குறைப்பதே அரசாங்கத்தின் தலையாய நோக்கம் என்று அண்மையில் கூறியிருந்தார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுப்பது அமெரிக்காவின் இரண்டாம் இலக்கு எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் சில நாள்களில் எட்டப்படும் எனவும் ஆகஸ்ட் 4ஆம் தேதி பேசுகையில் துணை அதிபர் நம்பிக்கை தெரிவித்தார். நிதி அமைச்சரின் தற்போதைய நிலைப்பாடு துணை அதிபரின் கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது.
அமெரிக்க எண்ணெய் இருப்புகள் அதிகம் உள்ளதாலும், அதன் தேவை சற்றுக் குறைந்ததாலும் விலைகள் இதுவரை ஓரளவு நிலையாக இருந்தன. ஆனால் ஹோர்முஸ் நீரிணை காலவரையற்று மூடப்படும் என்ற அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் படிப்படியாக ஏறத்தொடங்கியுள்ளன.
பிரன்ட் கச்சா எண்ணெய் குறியீட்டின்படி, ஒரு பீப்பாயின் விலை 0.1 விழுக்காடு உயர்ந்து $87.08 ஆனது. மேற்கு அமெரிக்காவின் டெக்சஸ் இன்டர்மீடியட் குறியீடு 6 காசுகள் ஏற்றமடைந்து $81.31 என்ற விலையை எட்டியது.


