ஹோர்முஸ் நீரிணையை ஈரான் நிர்வகிக்கும்: அரசாங்க ஊடகம்

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் நிர்வகிக்கும்: அரசாங்க ஊடகம்

1 mins read
946e0605-dafa-43e1-a910-c71880d9c77d
ஹோர்முஸ் நீரிணையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) சென்ற கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையை ஈரானே நிர்வகிக்கும் என்று அந்நாட்டின் தலைமைச் சமரசப் பேச்சாளர் முகம்மது பாகெர் கலிபாஃப் தெரிவித்திருக்கிறார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுகளைத் தொடர்ந்து அவரின் கருத்து வந்துள்ளது.

அந்தத் தகவலை ஈரானின் அரசாங்க ஊடகமான ஐஆர்என்ஏ செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்டது.

மத்திய கிழக்கை உலுக்கிவரும் மோதலை முடிக்குக்கு கொண்டுவருவதற்காகச் சுவிட்சர்லாந்தில் முதல் சுற்றுப் பேச்சு நடைபெறுகிறது. முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் போக்குவரத்திற்குத் திறந்துவிடுவதற்கும் லெபனானில் சண்டையை நிறுத்துவதற்கும் திங்கட்கிழமை ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.

“ஹோர்முஸ் நீரிணை போருக்கு முந்திய நிலைக்கு இனி ஒருபோதும் திரும்பாது. அது அனைத்துலகச் சட்டப்படி ஈரானால் நிர்வகிக்கப்படும்,” என்று திரு கலிபாஃப் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் சொகுசுப் பொழுதுபோக்குத்தலத்தில் நடைபெற்ற பேச்சில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக டெலிகிராம் ஊடகப் பதிவில் அவர் சொன்னார். பேச்சு தொடக்க நிலையிலேயே உள்ளது என்றும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் திரு கலிபாஃப் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ஈரானிய எண்ணெய்க்கு எதிரான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. சமரசப் பேச்சுகளைத் தொடர்ந்து, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அணுசக்திச் சோதனையாளர்கள் ஈரானுக்குள் சென்று சோதனையிட அந்நாடு அனுமதிக்கும் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்