சரணடைய மாட்டோம்: ஈரான் அதிபர்

சரணடைய மாட்டோம்: ஈரான் அதிபர்

2 mins read
7ccf6b62-8a5a-429a-bc84-8b23afc50660
ஈரானிய அதிபர் மசூத் பெஸெ‌ஷ்கியன். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

டெஹ்ரான்: இஸ்ரேலிடமும் அமெரிக்காவிடமும் தமது நாடு சரணடையாது என்று ஈரானிய அதிபர் மசூத் பெஸெ‌ஷ்கியன் கூறியுள்ளார்.

சனிக்கிழமை (மார்ச் 7) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமது உரையில் அவர் இவ்வாறு சொன்னார். ஈரானிய மக்கள் நிபந்தனையின்றி சரணடையவேண்டும் என்ற அந்நாட்டு எதிரிகளின் ஆசையை அவர்கள் சாகும் வரை கொண்டிருக்கவேண்டியிருக்கும் என்று திரு பெஸெ‌ஷ்கியன் கூறியிருக்கிறார்.

நிபந்தனையின்றி சரணடையவேண்டும் என்பதைத் தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கின. தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவரான ஆயத்துல்லா அல் காமெனி கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல் மீதும் இதர சில நாடுகளில் உள்ள அமெரிக்க சம்பந்தப்பட்ட இடங்கள் மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. சம்பந்தப்பட்ட நாடுகளில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு நாடுகள்.

காமெனி கொல்லப்பட்டதிலிருந்து ஈரானில் அமைக்கப்பட்ட இடைக்கால தலைமைத்துவ அமைப்பில் திரு பெஸெ‌ஷ்கியனும் இடம்பெற்றுள்ளார்.

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு

மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள அண்டை நாடுகளிலிருந்து தாங்கள் தாக்கப்படாவிட்டால் அவற்றின் மீது தாங்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று திரு பெஸெ‌ஷ்கியன் கூறியுள்ளார்.

முதலில் தாக்கப்படாமல் இருந்தால் அண்டை நாடுகளைத் தாக்குவதை நிறுத்திக்கொள்ளப்போவதாக ஈரானிய அதிபர் பெஸெ‌ஷ்கியன் தமது உரையில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஈரானின் அண்டை நாடுகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எனது சார்பிலும் ஈரானின் சார்பிலும் ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் திரு பெஸெ‌ஷ்கியன்.

“அண்டை நாடுகளிலிருந்து ஈரான் தாக்கப்படாவிட்டால் அவற்றின்மீது நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம், ஏவுகணைகளைப் பாய்ச்சமாட்டோம் என்று இடைக்காலத் தலைமைத்துவ அமைப்பு நேற்று ஒப்புக்கொண்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் தொடர்ந்து போராடும் என்றும் அவர் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் போரால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பயணத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானச் சேவைகள் ரத்தாகி வருகின்றன. துபாய், அபுதாபி, டோஹா போன்றவற்றில் இருக்கும் பிரபல விமான நிலையங்களில் விமானச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்