பேச்சு நடத்த பாகிஸ்தான் சென்ற ஈரான், அமெரிக்கக் குழுவினர்

பேச்சு நடத்த பாகிஸ்தான் சென்ற ஈரான், அமெரிக்கக் குழுவினர்

2 mins read
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: நிபந்தனைகளும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றமும்
fc1353a7-2a16-4cf9-b164-537143e7d985
பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்சை (நடுவில்) பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீரும் (இடது), பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரும் வரவேற்றனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

இஸ்லாமாபாத்: அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது.

பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்க அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்சும் தம் குழுவினருடன் இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள பாகிஸ்தானின் செரினா ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல் வாசலில் துப்பாக்கியுடன் நிற்கும் பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரி.
அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள பாகிஸ்தானின் செரினா ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல் வாசலில் துப்பாக்கியுடன் நிற்கும் பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரி. - படம்: ராய்ட்டர்ஸ்

கைகொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது

ஈரான் உண்மையான அர்ப்பணிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அமெரிக்கா கைகொடுக்கத் தயாராக இருப்பதாக முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வேன்ஸ் தெரிவித்தார்.

அதேவேளையில், “ஈரான் ஏமாற்ற நினைத்தால், அமெரிக்கக் குழு அதற்கு ஒருபோதும் இணங்காது,” என்றும் அவர் எச்சரித்தார்.

தூதுக்குழுவில் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வேன்ஸ் ஒரு ‘போர் எதிர்ப்பாளர்’ எனக் கருதும் ஈரான், அவர் மூலம் நேர்மையான உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறது.

எனினும், வேன்ஸ் அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுவார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தையை வழிநடத்த  அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (இடது) சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தான் சென்றார்.
அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தையை வழிநடத்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (இடது) சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தான் சென்றார். - படம்: ஏஎஃப்பி

ஈரான் முன்வைக்கும் முக்கிய நிபந்தனைகள்

இந்நிலையில், இரு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்று ஈரானின் நாடாளுமன்ற நாயகர் முகம்மது பாகர் கலிபாஃப் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் உடனடிப் போர் நிறுத்தம், அனைத்துலக அளவில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை விடுவிக்க வேண்டும் ஆகியவை அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் 24 மணி நேரத்திற்குள் ஈரானின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் விடுத்துள்ள எச்சரிக்கைகளால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

லெபனான்-இஸ்ரேல் பேச்சுவார்த்தை

மறுபுறம், லெபனான் அதிகாரிகளும் இஸ்ரேலிய குழுவினரும் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினருடனான போர் நிறுத்தம் இதில் சேராது என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள், மத்திய கிழக்குப் பதற்றத்தைத் தணிக்குமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்