இஸ்லாமாபாத்: ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புக்கும் உலகளாவிய சந்தைகளில் பெரும் கொந்தளிப்புக்கும் காரணமான எட்டு வார காலப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான பிரந்துரைகளை விவாதிக்க ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான ஒரு சலுகையை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஆனால் அந்தச் சலுகையில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பது தமக்கு இன்னும் தெரியாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா யாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கேட்கப்பட்டதற்கு, “நான் அதைக் கூற விரும்பவில்லை, ஆனால் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று திரு டிரம்ப் பதிலளித்தார்.
ஆனால், அமெரிக்காவின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்ட்காஃப் மற்றும் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இஸ்லாமாபாத்துக்குப் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தாலும், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் எந்தத் திட்டமும் இல்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். ஈரான் தரப்பு வாதங்கள் பாகிஸ்தான் மூலமாகத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

