தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி

2 mins read
d370fef4-1a66-49c4-9385-b6565eaa7b42
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் செய்தித்தாள்களைப் பார்க்கின்றனர். - படம்: இபிஏ

டெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் அண்மைய  முன்மொழிவுத் திட்டத்தில், ஈரான் மீதான வர்த்தகத் தடைகளின் நீக்கம் இடம்பெறாததால் அவ்விரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு இழுபறிக்கு உள்ளானதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஓமான் சமரசப் பேச்சாளராகச் செயல்படும் ஐந்து சுற்றுகள் நீடித்த பேச்சுவார்த்தைகளில் அந்நாடுகள் ஏப்ரல் முதல் ஈடுபட்டு வந்தன. 

வர்த்தகத் தடைக்குப் பதிலான ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முன்னைய ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 2018ல் கைவிட்டார். அதற்குப் பதிலான புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆயினும், வர்த்தகத் தடைகளை அகற்றுவது பற்றி அமெரிக்கத் திட்டம் குறிப்பிடவே இல்லை என்று ஈரானின் நாடாளுமன்ற நாயகர் முகமது பாகர் கலிபாஃப் தெரிவித்தார்.

இதனை நேர்மையின்மைக்கான அறிகுறி எனச் சாடிய திரு கலிபாஃப், அமெரிக்கா ஒருதலை ஒப்பந்தத்தை அமல்படுத்த முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார்.

“மதிமயக்கம் கொண்டுள்ள அமெரிக்க அதிபர், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தை அவர் உண்மையில் நாடுகிறார் என்றால் தம் அணுகுமுறையை மாற்றவேண்டும்,” என்று திரு கலிபாஃப் கூறினார்.

மே 31ஆம் தேதி, ஐந்தாவது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்காவின் உத்தேசத் திட்டத்தின் சில கூறுகளைப் பெற்றிருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது. அதிலுள்ள வாக்கியங்களில் சில பொருள்மயக்கம் கொண்டுள்ளவை என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடுமையான வர்த்தகத் தடைகளை அகற்றுவது, வர்த்தக அணுசக்திப் பயன்பாட்டுக்குத் தேவையான யுரேனியத்தைச் செறிவூட்டுவது ஆகியவை பேச்சுவார்த்தைகளின் முக்கிய விவகாரங்களாக இடம்பெற்றுள்ளன.

அணுவாயுதங்களைத் தயாரிக்க ஈரான் முற்படுவதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெகுகாலமாகக் கூறிவந்தபோதும் ஈரான் அதனை மறுக்கிறது.

குறிப்புச் சொற்கள்