துபாய்: ஐக்கிய அரபு சிற்றரசுகளின்மீது ஈரான் ஏவுகணை, ஆளில்லா வானூர்தி ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை தொழிற்பேட்டை பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதில் இந்தியர்கள் ஐவர் காயமடைந்ததாகவும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் பாய்ச்சிய துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ‘கிரூஸ்’ ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் சிற்றரசுகளின் வான் தற்காப்புப் படை இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
அபுதாபியின் கலிபா பொருளியல் மண்டலத்தின் ஒரு பகுதியை நோக்கி பாய்ச்சப்பட்ட எறிகணை ஏவுகணையை (Ballistic missile) வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து வீழ்த்தியதாக அந்நாட்டின் அரசு ஊடக அலுவலகம் கூறியது.
இருப்பினும், அந்த ஏவுகணை வெடித்துச் சிதறியதில் அதன் பாகங்கள் தொழிற்சாலைப் பகுதியில் விழுந்ததால் இரு இடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அது சொன்னது.
மற்றோர் அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஐவருக்கு லேசானது முதல் மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

