புதுடெல்லி: ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலின் லிட்டில் இந்தியா வட்டாரம் பலத்த சேதமடைந்தது.
சிதறுண்ட கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியதாகவும் அவர்களில் 64 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இஸ்ரேலின் தெற்கே இந்தியர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் டிமோனா நகர் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பிரதான அணுசக்தி நிலையம் அங்குதான் செயல்படுகிறது. மக்களின் வசிப்பிடத்திலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டர் தொலைவில் அந்த அணுசக்தி நிலையம் உள்ளது.
ஈரானின் நடன்ஸ் அணு ஆயுதச் செறிவூட்டல் தளத்தின் மீது இஸ்ரேல் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, சனிக்கிழமையன்று காலையில் டிமோனா மற்றும் அராட் நகரங்கள் தாக்கப்பட்டன.
அந்த நகரங்களை நோக்கிப் பாய்ந்த ஏவுகணைகளைத் தன்னால் இடைமறிக்க இயலவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
காயமடைந்த 64 பேரில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் கவலைக்கிடமான நிலையிலும் 40 வயதுப் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஏவுகணையின் சிதறல்கள் அவர்களிடம் காணப்பட்டதாகவும் மீட்புப் படையினர் கூறினர்.
அதேபோல, அராட் நகரின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 116 பேர் காயமடைந்தனர்
“பலத்த பாதுகாப்புள்ள டிமோனா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தால் ஏவுகணைகளை இடைமறிக்க இயலாவிட்டால், அது செயல்பாட்டு ரீதியாக, போரின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதற்கான அறிகுறியாகும்,” என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தொலைக்காட்சியில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
டிமோனா நகரில் 7,500 இந்திய-யூத சமூகத்தினர் வசிக்கின்றனர். நகரின் மொத்த மக்கள்தொகையில் அது கிட்டத்தட்ட 30 விழுக்காடு ஆகும்.
அங்குள்ள இந்தியர்கள் சரளமாக மராத்தி பேசுவதையும் ஓரளவு இந்தி பேசுவதையும் கேட்க முடியும். மேலும், அங்கு கிரிக்கெட்டிற்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்நகரின் கடைகளில் ‘சோன்பப்டி’, ‘குலாப் ஜாமூன்’, ‘பப்ரி சாட்’, ‘பேல்பூரி’ போன்ற இந்தியத் தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன.
டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகத் தரவுகளின்படி, 1950கள் மற்றும் 1960களில் இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஏராளமானோர் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கேரள, மேற்கு வங்காள மாநிலங்களில் இருந்தும் சிலர் அங்கு சென்று குடியேறியதாகக் கூறப்படுகிறது.

