இஸ்ரேலின் உத்தேசப் பதிலடி குறித்து ஈரானியர்கள் கவலை

இஸ்ரேலின் உத்தேசப் பதிலடி குறித்து ஈரானியர்கள் கவலை

படம்: ராய்ட்டர்ஸ்

16 Apr 2024 - 5:46 pm

2 mins read

துபாய்: கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியம் குறித்து பல ஈரானியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டிலும், 2022ஆம் ஆண்டிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஏற்கெனவே அவர்கள் பொருளியல் பிரச்சினைகளையும் கடுமையான சமூக, அரசியல் கட்டுப்பாடுகளையும் எதிர்நோக்குகின்றனர்.

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் தாங்களும் பதிலுக்குத் தாக்குதல் நடத்துவார்கள் என்று ஈரானின் அரசியல், ராணுவத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

“அது சாதாரண மக்களுக்கு நற்செய்தி அல்ல,” என்று 45 வயது ஆசிரியர் ஹிசாம் கூறினார்.

இஸ்ரேலியத் தாக்குதல் ஈரானியப் பொருளியலுக்கு இறுதி அடியாக இருக்கக்கூடும் என்று 37 வயது இல்லத்தரசி பார்வானே அஞ்சுகிறார்.

“ஈரானியர்களான நாம் பல்லாண்டுகளாக அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். போர், பேரிடரை மட்டுமே கொண்டுவருகிறது. என் கணவர் ஒரு தொழிற்சாலை ஊழியர். அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்குக்கூட எங்களிடம் போதிய பணம் இல்லை,” என்றார் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாரான அவர்.

ஏப்ரல் 1ஆம் தேதி டமாஸ்கசில் தனது துணைத் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறுகிறது. அதற்கு ஈரான் கொடுத்த பதிலடியின் தொடர்பில், மக்களிடையே பெருமையும் அச்சமும் கலந்த உணர்வுகள் தென்படுகின்றன.

“இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இஸ்ரேல் அதனைத் தொடங்கியது. நாம் பதிலடி கொடுக்கவேண்டியிருந்தது. இஸ்ரேலால் எதையும் செய்ய முடியாது. ஈரான் மிக சக்திவாய்ந்தது என்று அதற்குத் தெரியும்,” என்று 30 வயது அரசாங்க ஊழியர் ஹொசேன் சபாஹி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
ஈரான்இஸ்ரேல்தாக்குதல்பொருளியல்