துபாய்/வாஷிங்டன்: அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் வரை, தானும் தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான்மீது இருவாரங்களாக நடத்தப்பட்டு வந்த குண்டுவீச்சுத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிறுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகவும் இலக்குகள் முடிவடைந்துவிட்டதாகவும் ராணுவ ஆலோசகர்கள் திரு டிரம்ப்பிடம் கூறியதையடுத்து, அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 24), தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியது.
அரசதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், திரு டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக ஐநாவிற்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்தச் செய்தி அமெரிக்காவிற்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கத் தயார் என அவர் எச்சரித்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உண்மையான அமைதி முயற்சியன்று என்றும், அது ஓர் உத்திசார்ந்த இடைவேளை மட்டுமே என்றும் ஈரான் சந்தேகிக்கிறது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இதற்குப் பதிலடியாக, அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரானும் தாக்குதல்களை நடத்திவந்தது.
போரை நிறுத்தவோ தீர்க்கமாகத் தாக்கவோ செய்யாமல் அமெரிக்கா விளையாடுவதாக ஈரானியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்தத் திடீர் அறிவிப்புகளால் வர்த்தகமும் அன்றாட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தங்கம், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்
அமெரிக்கா-ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததுடன், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த தடங்கல்களும் பணவீக்க அபாயமும் சற்றுத் தணிந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $91ஆகக் குறைந்தது. எண்ணெய் விலை குறைந்ததால் உலக அளவில் பணவீக்கம் தொடர்பான அச்சம் சற்றுக் குறைந்தது, முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் தங்க விலை அவுன்சுக்கு US$4,100 வரை உயர்ந்தது.
அதேவேளையில், சவூதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்கள்மீது ஹூதிப் படையினர் அண்மையில் நடத்திய தாக்குதல்கள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்திய போதிலும், சந்தையில் எண்ணெய் விலை கட்டுக்குள் வந்துள்ளது.

