துபாய்: டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் பார்டிஸ் வட்டாரத்தில் புதன்கிழமை (மே 13) அதிகாலை ஒன்பது நில அதிர்வுச் சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளன.
அதனை ஈரானின் மெஹிர் ஊடகம் அறிவித்தது. எனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதென அங்கு வாழும் மக்களுக்கும் புவிசார் நிபுணர்களுக்கும் அச்சம் எழுந்துள்ளது.
தொடர்ந்து ஏற்பட்டுவரும் நில அதிர்வுகள், பூமிக்கு அடியில் உள்ள பல பிளவுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலநடுக்கத்தை அது உண்டாக்கும் என அஞ்சப்படுகிறது.
அந்த வட்டாரத்தில் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமாகும். இருப்பினும் இந்த அளவுக்கு பல இடங்களில் நில அதிர்வுகள் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததில்லை.
அதிர்வுகள் அனைத்தும் ஓர் இரவில் டெஹ்ரான் மாநிலத்தில் உணரப்பட்டது. ஆக அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஈரானின் மொஷா நில அதிர்வு மண்டலத்தில் அது ஏற்பட்டதே ஆய்வாளர்களின் அச்சத்துக்குக் காரணமாக அமைந்தது.
நில அதிர்வின் ரிக்டர் அளவு 4.6 என ஈரான் அரசாங்க ஊடகம் பதிவு செய்தது. மக்களுக்குக் காயமோ, கட்டமைப்புகளுக்கு சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
எதிர்காலத்தைக் கணிக்கமுடியவில்லை
நில அதிர்வுகள் பூமிக்கடியில் உள்ள அழுத்தம் தணிந்ததற்கான வெளிப்பாடா அல்லது எதிர்கால பெரும் பேரிடரின் அறிகுறியா என்பதை சரிவரக் கணிக்கமுடியவில்லை என்று அரசு ஊடகம் தெரிவித்தது.

