அணுவாயுதம் தயாரிக்க ஈரானின் புதிய தலைவர் ஆர்வம்: அமெரிக்கா

அணுவாயுதம் தயாரிக்க ஈரானின் புதிய தலைவர் ஆர்வம்: அமெரிக்கா

1 mins read
3ea47ab0-bd7a-4ed5-9440-9d5b2bf3ea55
ஈரானின் மா‌ஷாட் நகரில் இம்மாதம் 9ஆம் தேதி நடந்த முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கின்போது திரண்ட கூட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி, முன்னாள் தலைவர் காலஞ்சென்ற ஆயத்துல்லா அலி காமெனியை விட அணுவாயுதங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் தலைவர் மாண்டார். அதையடுத்து, மொஜ்தபா காமெனி தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்றது.

ஈரானின் புதிய தலைமை, அதிநவீன அணுவாயுதங்களைத் தயாரிக்கும் இலக்கைக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

முன்னாள் தலைவர் அலி காமெனி அணுவாயுதத் தயாரிப்பில் தயக்கம் காட்டிவந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்போதைய தலைவர் மொஜ்தபாவுக்கு அத்தகைய தயக்கம் எதுவும் இல்லை என்று உளவுத்துறைத் தகவல்கள் கூறுகின்றன.

ஈரான் அதன் அணுவாயுதத் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியதற்கான தெளிவான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என்றாலும் அணுமின் நிலையங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க, இஸ்ரேலியத் தாக்குதல்களை எதிர்கொள்ள அணுவாயுதம் மட்டுமே சரியான வழி என்ற ஈரானின் வாதம், தற்போதைய சூழலில் மேலும் வலுவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அதிகரிப்பது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலித்துவரும் வேளையில் அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடு வெளியாகியுள்ளது. ஈரானின் உச்சத் தலைவர் அணுவாயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடும் என்ற கருத்து, அதற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்த வழிவிடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்ஈரான் போர்அமெரிக்காஇஸ்ரேல்அணுவாயுதம்