ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் புதிய பரிந்துரை: அறிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் புதிய பரிந்துரை: அறிக்கை

1 mins read
bd2ba7e1-953e-46e2-b432-803b395201be
ஹோர்முஸ் நீரிணையில் ஏப்ரல் 24ஆம் தேதி கடந்துசென்ற கப்பல்களும் படகுகளும். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதன் தொடர்பில் ஈரான் அமெரிக்காவிடம் புதிய பரிந்துரையை முன்வைத்துள்ளது.

அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தையும் டெஹ்ரான் முன்மொழிந்துள்ளது. ஆனால் அணுவாயுதங்கள் குறித்துப் பின்னர் விவாதிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்திருக்கிறது.

ஏக்ஸியோஸ் ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது. அமெரிக்க அதிகாரி ஒருவரையும் தகவல் அறிந்த மேலும் இரண்டு வட்டாரங்களையும் மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சமரசப் பேச்சாளர்களின் மூலம் புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர ஏதுவாகச் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கவும் அதில் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் முற்றுகை முடிவுக்கு வந்த பிறகே அணுவாயுதங்கள் குறித்த பேச்சைத் தொடங்கமுடியும் என்றும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிய சமரசப் பேச்சாளர்கள் வெள்ளை மாளிகையிடம் புதிய பரிந்துரையைக் கொடுத்திருக்கின்றனர். ஆனால் அதுகுறித்து அமெரிக்கா ஆராய விரும்புகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஏக்ஸியோஸ் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தேசியப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகளைக் கவனித்துவரும் அதிகாரிகளுடன் பேசத் திட்டமிட்டுள்ளார்.

“இவை மிகவும் முக்கியமான அரசதந்திர விவாதங்கள். ஊடகங்களின் வழியாக அவைபற்றி அமெரிக்கா பேசாது,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஒலிவியா வேல்ஸ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்