வாஷிங்டன்: ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி தாக்குதலில் காயமுற்றதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) கூறியிருக்கிறார்.
அவர் உருக்குலைந்திருக்கக்கூடும் என்று திரு ஹெக்செத் தெரிவித்தார்.
ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு வாரமாகத் தாக்கிவரும் நிலையில், நாட்டை ஆட்சி செய்யும் திரு காமெனியின் ஆற்றல் குறித்து அமெரிக்க அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் திரு காமெனியின் தந்தை, மனைவி உட்பட குடும்பத்தார் பலர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அவரின் அண்மைப் படம் எதுவும் வெளியிடப்படவில்லை.
போர் குறித்துத் திரு மொஜ்தபா முதன்முறையாகக் கூறிய கருத்துகளை வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்தியாளர் வாசித்தார். அதில் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று திரு மொஜ்தபா குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கத் தளங்களை மூடுமாறு அண்டை நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். மீறினால் அவற்றை ஈரான் குறிவைக்கும் என்றும் திரு மொஜ்தபா எச்சரித்தார்.
“ஈரானின் புதிய உச்சத் தலைவர் காயமடைந்துள்ளார். பலவீனமான அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவரின் குரல் இல்லை, காணொளி இல்லை. எழுத்துபூர்வமான அறிக்கை மட்டுமே. அது ஏன்? காரணம், அவர் அச்சமடைந்துள்ளார். மறைந்து வாழ்கிறார்,” என்று திரு ஹெக்செத் செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.
ஆனால் ஈரானின் உச்சத் தலைவர் இலேசாகக் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்து இயங்குவதாகவும் ஈரானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

