வாஷிங்டன்: வாஷிங்டன் முன்வைத்த அமைதித் திட்டத்திற்கு ஈரான் கொடுத்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (மே 10) கூறியிருக்கிறார்.
அவரின் கருத்து, கடந்த 10 வாரங்களாக மத்திய கிழக்கில் நடந்துவரும் பூசல் முடிவுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பைக் குலைத்துவிட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த தாக்குதல்களின் காரணமாக ஈரானிலும் லெபனானிலும் பல பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கடல்துறைப் போக்குவரத்து நிலைகுத்திப் போயிருக்கிறது. உலக அளவில் எரிசக்திக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
சமரசப் பேச்சை மீண்டும் தொடங்கலாம் என்ற பரிந்துரையை அமெரிக்கா சில நாள்களுக்கு முன்னர் முன்வைத்திருந்தது. ஈரான் ஞாயிற்றுக்கிழமை அதற்கு பதில் தந்திருந்தது. போரை, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் நிறுத்தவேண்டும் என்று அது சொன்னது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்புப் பற்றியும் குறிப்பிடப்பட்டதாக ஈரானின் அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.
போரால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டையும் ஈரான் அதன் பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது. ஹோர்முஸ் நீரிணையில் ஈரானுக்கு உள்ள அதிகாரமும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
நீரிணையை முற்றுகையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்; இனிமேலும் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடா; அனைத்துத் தடைகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஈரானின் பரிந்துரைகளில் அடங்கும்.
ஈரானின் அணுத்திட்டம் உட்பட சர்ச்சைக்குரிய பல அம்சங்கள் குறித்துப் பேசுவதற்கு முன்பு சண்டையை நிறுத்துவதற்கு அமெரிக்கா முன்மொழிந்திருந்தது.
சமரசப் பேச்சில் இடைத்தரகராகச் செயல்படும் பாகிஸ்தான், ஈரானின் பதிலை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஈரானின் பரிந்துரை வெளியிடப்பட்ட ஒருசில மணிநேரத்தில், அமெரிக்க அதிபர், சமூக ஊடகத்தில் அதனை நிராகரித்துப் பதிவிட்டார்.
“ஈரானின் பிரதிநிதிகள் என்று கூறப்படுவோரின் பதிலை இப்போதுதான் படித்தேன். எனக்கு அது பிடிக்கவில்லை. அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று திரு டிரம்ப், ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார். மேல் விவரம் எதனையும் அவர் தரவில்லை.

