டெஹ்ரான்: ஈரானின் தேசியப் பாதுகாப்புத் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திரு அலி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) இரவு கொல்லப்பட்டதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. திரு அலியின் இழப்பு ஈரானிய ராணுவத்திற்குப் பெரிய பின்னடைவைத் தரும் என்று கூறப்படுகிறது.
திரு அலியின் மரணத்தை ஈரானும் உறுதிசெய்துள்ளது. 68 வயதான திரு அலி ஈரானின் அணுவாயுதத் திட்டம், உத்திபூர்வத் திட்டம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாகப் பங்காற்றினார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுவரை மொஜ்தபா காமெனி பொதுவெளியில் வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது.
ஈரானின் ராணுவத் தலைவர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
ஈரானின் புரட்சிப் படையின் தலைவர்களில் ஒருவரான ஹோலம்ரிசா சுலைமானி திங்கட்கிழமை (மார்ச் 16) டெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தொடரும் பதற்றம்
செவ்வாய்க்கிழமை இரவு, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடித்தது. ஈராக், லெபனான், ஈரான் ஆகிய நாடுகளில் குண்டு மழை பொழிந்தது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடுமையான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மில்லியன்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல் கச்சா எண்ணெய் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உலகப் பொருளியலுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
தலைவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்று கூறப்படுவதால் நிலைமை மேலும் மோசமாகும் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

