வாஷிங்டன்: மத்திய கிழக்கு வட்டாரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்குச் சில நிபந்தனைகளுடன் தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்தார்.
இதையடுத்து ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டிருந்த படைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பரந்த அளவிலான விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது. அடுத்த 60 நாள்களுக்குள் இந்தப் பேச்சுவார்த்தையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.
1979ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லாத நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஜூன் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இரு தரப்புப் பேச்சுவார்த்தையும் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்சியும் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிந்தது. இருப்பினும், போரின்போது ஈரான் முற்றுகையிட்டதால் எரிசக்திப் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்து இன்னமும் மந்தமாகவே உள்ளது.
ஒப்பந்தத்தின்படி இப்பாதை உடனடியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கிய முதல் நாளிலேயே நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானில் நீண்டகாலம் உச்சத் தலைவராகப் பொறுப்பு வகித்த அலி காமெனி கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது மகன் மொஜ்தபா காமெனி ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது அவர் வெளியிட்டுள்ள எழுத்துபூர்வ அறிக்கையில், இந்த ஒப்பந்தம் குறித்துத் தமக்கு மாற்றுக்கருத்து இருந்தபோதிலும் அதற்குத் தாம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் மாற்றுக்கருத்து பற்றி அவர் விவரிக்கவில்லை.
“ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அதிபர் பெசெஷ்கியன் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த உறுதியின் காரணமாகவே நான் இதற்கு அனுமதி அளித்துள்ளேன்,” என்றார் அவர்.
எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் ஆனால் எதிரியின் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று அதற்கு அர்த்தமல்ல என்றும் அவர் திட்டவட்டமாகத் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

