ஈரான் மக்களின் வாழ்க்கை அசாதாரணமான சூழலுக்குள் சிக்கி பல வாரங்கள் கடந்துவிட்டன.
ஈரானில் பொருளியல் நெருக்கடி கடுமையாகி, அதன் நாணயம் வரலாறு கண்டிராத அளவாக சரிந்துவிட்டது. இதனால் விலைவாசி உயர்ந்து, வணிகம் முதல் வாழ்வாதாரம் வரை எல்லாம் முடங்கியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அந்நாட்டின் சமயத் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனி தலைமையில் கடந்த 37 ஆண்டுகளான நீடித்து வரும் மத ஆட்சி வேண்டாம் என்று கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி நாட்டில் உள்ள 31 மாநிலங்களுக்கும் பரவிவிட்டன.
2,885 ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்பட 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக மனித உரிமைக் குழுக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
1979ல் ஈரானில் நடைபெற்ற சமயப் புரட்சிக்குப் பிறகு, தற்போது மிகப்பெரிய உள்நாட்டு வன்முறையாக உருவெடுத்துள்ளன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள்.
மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சி, கிட்டத்தட்ட 40 விழுக்காட்டுப் பணவீக்கம் எனப் பல காரணங்கள் இதன் தொடர்பில் முன்வைக்கப்பட்டாலும், இதற்குப் பின் மாபெரும் அரசியல் சூழ்ச்சி இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரானுடன் வர்த்தக உறவுகளைத் தொடரும் நாடுகள்மீது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என மிரட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். இது, ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகக் கருதப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, “சமயமன்றத் தலைவர் ஆயத்துல்லா, அடக்குமுறையை நம்பியே ஈரானை ஆட்சி செய்து வருகிறார். நாட்டை வாழத் தகுதியில்லாத இடமாக மாற்றிவிட்டார். ஈரானுக்குப் புதிய தலைமைத்துவம் தேவை,’’ என்று அறைகூவல் விடுத்துள்ளார் டிரம்ப்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, ஆட்சியாளர்கள் பழிசுமத்தும் போக்கைக் கைவிட்டு, மக்களின் வாழ்வை வளமானதாக்க இதை முக்கிய வாய்ப்பாகக் கருதி பொருளியல் கொள்கைகளைச் சீர்செய்ய வேண்டும். இந்த நம்பிக்கையோடுதான் அனைத்துலகச் சமூகம் காத்திருக்கிறது.

