பாக்தாத்: ஈராக்கில் நடந்த பொதுத் தேர்தலில் வெளியிடப்பட்ட முதற்கட்ட முடிவுகளில் ஆளும் முஹம்மது ஷியா அல்-சுடானியின் கூட்டணிக் கட்சி, தான் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரதமர் அல்-சுடானியின் ஆதரவாளர்கள் தலைநகர் பாக்தாத்தின் தஹ்ரிர் சதுக்கத்தில் ஒன்றுகூடி வாணவேடிக்கையுடன் இசையொலித்து வெற்றியைக் கொண்டாடிவருகின்றனர்.
தொலைக்காட்சியில் நேரடியாகத்தோன்றி பேசிய பிரதமர், இந்த வெற்றி, அனைத்து ஈராக்கியருக்குமானது என்று அர்ப்பணித்து கூட்டணியின் வெற்றியைப் பாராட்டினார்.
சமூக ஊடகத்தில் தனிப்பட்ட முறையில் பதிவிட்ட பிரதமர், ஈராக்கிய மக்கள் வழங்கிய ஆதரவுக்கு தமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் தமது கூட்டணிக்கு நாட்டின் மறுசீரமைப்பும் தொடர்ச்சியான மேம்பாடும் முதலிடம் பெறுகின்றன என்றார்.
ஈராக்கிய மக்கள், கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) பொதுத் தேர்தலைச் சந்தித்தனர். அந்த வட்டாரமே கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், அமைதியாக தேர்தல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் தலைவிரித்தாடும் ஈராக்கில் வேலை, உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முக்கியக் கடமைகள் அடுத்துவரும் ஆட்சிக்கு உள்ளது.
இவற்றையும் தாண்டி, ஒருபக்கம் அமெரிக்காவையும் மறுபக்கம் ஈரானையும் சமாளிக்கும் அரசியல் சவாலும் ஈராக் அரசாங்கத்துக்கு வெளிப்படையாக இருக்கும் பிரச்சினையாகும்.
ஈராக்கின் தேர்தல் ஆணையம், ஒட்டுமொத்த 21மில்லியன் மக்கள்தொகையில், 12 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆளும் பிரதமரின் கூட்டணி, 1.3 மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஷியா பிரிவு சமயத் தலைவர் மொக்டாடா சாடர் அவரது ஆதரவாளர்களை தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தும் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.
தற்போதுள்ள அரசியல் அமைப்பின்படி, பிரதமர் பதவி, ஷியா பிரிவைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கப்படும். நாடாளுமன்ற சபாநாயகர் சன்னிப் பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். சம்பிரதாயத்துக்கு இயங்கும் அதிபர் பதவி, குர்திய இனத்தவருக்கு வழங்கப்படும்.

