பெண்ணுக்கு 9, ஆணுக்கு 15: திருமண வயதைக் குறைக்கும் நாடு

1 mins read
bda4eec7-fa71-402c-a4c7-7733d2414d57
திருமண வயதைக் குறைக்கும் சட்ட முன்வரைவை எதிர்த்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) போராட்டத்தில் இறங்கிய பெண்கள். - படம்: ஏஎஃப்பி

பாக்தாத்: பெண்களின் திருமண வயதை ஒன்பதாகவும் ஆண்களின் திருமண வயதை 15ஆகவும் குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட முன்வரைவு ஈராக் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் கடுமையாகச் சாடியுள்ளன.

இப்போதைக்கு, ஈராக்கில் பெண்கள் 18 வயதை எட்டிய பின்னரே திருமணம் செய்துகொள்ள முடியும்.

இருப்பினும், ஈராக்கின் நீதித்துறை முன்வைத்துள்ள புதிய சட்ட முன்வரைவானது, குடும்ப விவகாரங்களுக்கு சமய நெறிமுறைகள் அல்லது சட்ட விதிமுறைகள், இரண்டில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்ற வழிவகை செய்கிறது.

இந்நிலையில், புதிய சட்டமானது வாரிசு உரிமை, மணமுறிவு உள்ளிட்ட விவகாரங்களில் பெண்களின் உரிமைகளைக் குறைத்துவிடும் எனக் கூறி, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

அத்துடன், குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கும் இளம்பெண்களைச் சுரண்டுவதற்கும் புதிய சட்டம் வழிவகுத்துவிடும் என்றும் அச்சம் எழுந்துள்ளது.

இளம்பெண்களின் கல்வி, உடல்நலம், ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றில் கடுமையான எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என்றும் மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

குழந்தைத் திருமணத்தால் பெண்கள் பள்ளியிலிருந்து இடையிலேயே நிறுத்தப்படலாம், சிறுவயதிலேயே கருத்தரிக்கலாம், குடும்ப வன்முறைக்கு அதிக வாய்ப்புள்ளது - இவையெல்லாம் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டும் எதிர்மறை விளைவுகள்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப், ஈராக்கில் இப்போதே 28 விழுக்காட்டுப் பெண்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமண உறவில் இணைவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்