டெஹ்ரான்: ஈரானை 30 ஆண்டுகாலமாக இரும்புக் கரங்கள் கொண்டு ஆட்சி செய்த அயத்துல்லா அலி காமெனி அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை (பிப்ரவரி 28) நடத்திய முதல்நாள் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
உலகில் மிகவும் நீண்ட காலம் பதவி வகித்தோரில் 86 வயதான அவரும் ஒருவர். ஈரானின் வடகிழக்கு நகரான மஷத்தில் 1939ஆம் ஆண்டு பிறந்த அவரது மறைவை ஈரானின் அதிகாரபூர்வ தொலைகாட்சி உறுதி செய்துள்ளது.
அவர் உயிரிழந்ததை அறிந்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள மஸ்ஜித் அஸ்கரிபுர் பள்ளிவாசலைச் சுற்றிப் பல்லாயிரக்கணக்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) மக்கள் திரண்டுள்ளனர்.
கடந்த 1979ஆம் ஆண்டில் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் இதுவரை இரண்டே தலைவர்கள் பதவி வகித்துள்ளனர்.
முதலாமவரான புரட்சிக்கு வித்திட்ட அயத்துல்லா ருஹொல்லா கொமெய்னி, 1979ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டில் அவர் இறக்கும்வரை ஆட்சி செய்தார்.
அவருக்குப் பிறகு பதவியேற்றவரே அயத்துல்லா அலி காமெனி. ஈரானின் தலைவர் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்புகளைத் தம்வசம் கொண்டுள்ளவர் ஆவார்.
ஈரானின் அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் புரட்சிக் காவல் படைக்கும் அவரே தலைவர். அயத்துல்லா அலி காமெனி ஒரு சர்வாதிகாரி என்று பார்க்கப்படாவிட்டாலும் பல முக்கிய அரசாங்க அமைப்புகளுக்கு நடுவே அரசியல் முடிவுகளை இறுதியாக எடுக்கும் கடமை அவரிடம் இருந்தது.
அரசின் பொது அலுவலகங்களின் அதிகாரிகளை அவரே நியமனம் செய்தார். காமெனி இல்லாத அரசாங்கத்தை இளம் ஈரானியர்கள் இதுவரை கண்டதில்லை.
தொடர்புடைய செய்திகள்
அவரது ஆட்சியில் பல அதிபர்கள் பதிவியில் இருந்தாலும் வெளிநாடுகளில் அவர்கள் பிரபலம் அடைந்திருக்கலாம். ஆனால் உள்நாட்டில் அயத்துல்லா காமெனியே அனைத்து முடிவுகளையும் எடுத்துவந்தார்.
அவரின் அசைவுகள் அனைத்தையும் அரசின் தொலைகாட்சி ஒளிபரப்பிக்கொண்டே இருந்தது. பொது இடங்களிலும் கடைத்தொகுதிகளிலும் பெரிய விளம்பரப் பதாகைகளில் அவரின் உருவப் படங்கள் வெகுவாக அலங்கரித்த வண்ணம் இருந்தன.
வன்முறையில் நிகழ்ந்துள்ள அவரது இந்த திடீர் மறைவு அவ்வட்டாரத்தில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயமற்ற சூழலில் ஈரானிலும் மத்தியக் கிழக்கிலும் எதிர்காலத்தை அவரது மரணம் கேள்விக்குறியாக்கியுள்ளது.

