சிரியா சிறையிலிருந்து தப்பிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்

1 mins read
aef7a57a-55a2-4fb5-81a9-9595c7484889
சிறைச்சாலைக்கு அருகில் உள்ள வட்டாரங்கள், நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு தப்பி ஓடிய 81 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். எஞ்சியோரைத் தேடிப் பிடிக்கும் பணிகள் தொடர்வதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ஏஎஃப்பி

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ஷட்டாடி சிறையிலிருந்து ஏறத்காழ 120 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிவிட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 20) தெரிவித்தது. அவர்கள் அந்தச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அச்சிறையிலிருந்து ஏறத்தாழ 1,500 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிவிட்டதாகக் குர்தியர்கள் தலைமை தாங்கும் சிரிய ஜனநாயகப் படைகளின் செய்தித்தொடர்பாளர் கூறியதாகக் குர்திய இணையத்தளம் ருடாவ் தெரிவித்தது.

பயங்கரவாதிகள் தப்பி ஓடியபோது சிரிய ராணுவ வீரர்களும் சிறப்புப் படையினரும் சிறைச்சாலைக்குள் நுழைந்ததாக அமைச்சு கூறியது.

சிறைச்சாலைக்கு அருகில் உள்ள வட்டாரங்கள், நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு தப்பி ஓடிய 81 பயங்கரவாதிகள் பிடிபட்டனர்.

எஞ்சியோரைத் தேடிப் பிடிக்கும் பணிகள் தொடர்வதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிரிய ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த சிறையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பலர் தப்பிவிட்டதாக சிரிய ராணுவம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. சிரிய ஜனநாயகப் படை அந்தக் கைதிகளை விடுவித்ததாக ராணுவம் குற்றம் சுமத்தியது.

சிரிய அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் பல நாள்கள் போரிட்ட பிறகு, ராக்கா மற்றும் டயிர் அல் ஸோர் நகரங்களிலிருந்து பின்வாங்க சிரிய ஜனநாயகப் படை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) இணங்கியது.

கடந்த பல ஆண்டுகளாக சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த இவ்விரு நகரங்களிலும் அரபியர்கள் அதிகம் உள்ளனர். சிரியாவின் பிரதான எண்ணெய்க் கிணறுகளும் அங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்