வாஷிங்டன்: அமெரிக்க, நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில் ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய இரண்டாம் நிலைத் தலைவரான அபு-பிலால் அல்-மினூக்கி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (மே 15) தெரிவித்தார்.
இது குறித்துத் தமது ‘டுரூத் சோஷியல்’ சமூக ஊடகத் தளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், “எனது நேரடி உத்தரவின் பேரில், மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுவந்த பயங்கரவாதியைக் கொல்வதற்காக அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப் படைகளும் களமிறங்கின. அத்திட்டத்தை மிகவும் துல்லியமாகச் செயல்பட்டு அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்,” எனக் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்காவில் தலைமறைவாக இருந்து தப்பிக்கலாம் என அல்-மினூக்கி எண்ணியிருந்ததாகவும் அவருடைய நடமாட்டங்களை உளவுத்துறை கண்காணித்து வருவதை அவர் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
எனினும், இந்த ராணுவ நடவடிக்கை நடத்தப்பட்ட இடத்தை தமது பதிவில் அவர் வெளியிடவில்லை.
நைஜீரியக் குடியுரிமை கொண்ட அல்-மினூக்கி, கடந்த 2023ஆம் ஆண்டில் முந்தைய பைடன் நிர்வாகத்தால் அனைத்துலகப் பயங்கரவாதி எனப் பட்டியலிடப்பட்டவர் என்று அமெரிக்க அரசுப் பதிவேட்டுத் தரவுகள் காட்டுகின்றன.

