கோலாலம்பூர்: இஸ்கந்தர் மலேசியா பொருளியல் மேம்பாட்டு வட்டாரம் இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 40.3 பில்லியன் ரிங்கிட் முதலீட்டுக் கடப்பாடுகளைப் பெற்றதாகவும் அவற்றில் நிறைவுபெற்ற முதலீட்டின் அளவு 22.5 பில்லியன் ரிங்கிட் என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
கோலாலம்பூரில் வியாழக்கிழமை (அக்டோபர் 24) நடைபெற்ற இஸ்கந்தர் வட்டார மேம்பாட்டு ஆணையத்தின் 33வது கூட்டத்தில் தாம் இதனை தெரிவித்ததாக அவரது எக்ஸ் தளப் பதிவு குறிப்பிட்டது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை உள்ளடக்கிய இஸ்கந்தர் மலேசியாவுக்கான நடவடிக்கைகள் மற்றும் செயலாக்கம் தொடர்பான அம்சங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சருமான திரு அன்வார் கூறினார்.
வரவுசெலவுத் திட்டத்தில் ஜோகூர் மாநிலத்துக்காக அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய, தயார்நிலையில் உள்ள திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.