சிடோர்ஜோ: இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சிடோர்ஜோ பகுதியில் இருக்கும் இஸ்லாமியப் பள்ளி ஒன்றின் கட்டடம் செப்டம்பர் 29ஆம் தேதி இடிந்தது.
அச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் அப்துல் முகாரி தெரிவித்தார்.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் 38 பேரைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் 102 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில், உயிருடன் மீட்கப்பட்ட 99 பேர் உட்பட உயிரிழந்த மூவரும் அடங்குவர் என அந்நாட்டுத் தேசிய தேடுதல், மீட்பு நிறுவனத்தின் தலைவர் முகமது சியாஃபி குறிப்பிட்டார்.
சம்பவத்தன்று 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிற்பகல் வழிபாட்டிற்காக அக்கட்டடத்தில் கூடியதாகவும் பல மாடிகள் கொண்ட அக்கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததாகவும் அச்சம்பவத்தை நேரில் கண்டோர் கூறியதாக அவ்வட்டாரச் செய்தி நிறுவனமான ‘அந்தாரா’ செய்தி வெளியிட்டது.