சிரியாவில் இஸ்லாமிய அரசு; கவலையில் எகிப்து

2 mins read
a773a61f-3998-465f-88a8-edcd3a403c64
எகிப்திய வெளியுறவு அமைச்சர் பாடர் அப்பிடிலாட்டி முன்னாள் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து வீழ்த்தப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர், டிசம்பர் 14ஆம் தேதி, செய்தியாளர் மாநாட்டில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: சிரியாவில் ஆட்சியை இஸ்லாமிய தீவிரவாதிகள் பிடித்திருப்பது எகிப்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், எகிப்தில் ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’ என்ற இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பை பல ஆண்டுகளுக்கு முன்னரே வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தில் தற்பொழுது அமர்ந்துள்ள எகிப்திய அதிபர் அப்டெல் ஃபாட்டா அல்-சிசி சிரியாவுடனான உறவுகளை எச்சரிக்கையுடன் வகுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முந்தைய சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தை கடைசி நிமிடம் வரை ஆதரித்துவிட்டு தற்போது ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையில் சிரியாவில் புதிய அரசு அமைந்துள்ளதால் அதன் விளைவு குறித்த கவலையில் எகிப்து உள்ளது.

“இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் செயல்பட்ட விதத்தால், சிரியாவில் இஸ்லாமியவாதிகள் தலைமையில் ஏற்பட்டுள்ள ஆட்சியால் எகிப்தில் ஏற்பட்டுள்ள கவலை புரிந்துகொள்ளக்கூடியதே,” என்று வாஷிங்டனில் செயல்படும் வில்சன் சிந்தனை-ஆய்வு மையத்தின் மத்திய கிழக்குப் பிரிவு இயக்குநர் திருவாட்டி மெரிசா கூர்மா கூறுகிறார்.

மத்திய கிழக்கில் உள்ள பல அரபு நாடுகள் புதிய சிரியா அரசாங்கத்துடன் விரைவாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட நிலையில், எகிப்து எச்சரிக்கையுடன் செயல்பட்டது.

எகிப்திய வெளியுறவு அமைச்சர் பாடர் அப்பிடிலாட்டி முன்னாள் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து வீழ்த்தப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், திரு பாடர் அப்பிடிலாட்டி மூன்று வாரங்கள் கழித்தே சிரியா வெளியுறவு அமைச்சருடன் தொடர்பு கொண்டார். அப்பொழுது புதிய சிரியா அரசு அனைவரையும் உள்ளடக்கி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

எகிப்திய வெளியுறவு அமைச்சருடன் தாம் தொலைபேசியில் உரையாற்றியதை உறுதி செய்த சிரியா வெளியுறவு அமைச்சர், இரு நாடுகளும் மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலைத்தன்மையையும் வளப்பத்தையும் ஏற்படுத்துவதில் பொதுவான பங்கு உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜனவரி 4ஆம் தேதி (சனிக்கிழமை) மனிதாபிமான முறையில் உதவிப் பொருள்களுடன் முதல் எகிப்திய விமானம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்ததாக எகிப்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்