சிரம்பான்: நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் முஹ்ரிஸ் முனாவிரின் கட்டளைப்படி, இஸ்மாயில் லாசிம் தொடர்ந்து அந்த மாநிலத்தின் முதலமைச்சராக நீடிப்பார். தாம் பதவி விலகல் கடிதம் எதையும் சமர்ப்பிக்கவில்லை அல்லது அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்று திரு இஸ்மாயில் மறுத்த நிலையில், இது தொடர்பான சர்ச்சை எழுந்தது.
மாநில நிர்வாகத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தொடர்ந்து தமது கடமைகளைத் தொடருமாறு ஆட்சியாளர் முஹ்ரிஸ் தம்மிடம் அறிவுறுத்தியதாக திரு இஸ்மாயில் தெரிவித்தார்.
தம்முடைய கடமைகளையும் பொறுப்புகளையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதாக திரு இஸ்மாயில் உறுதியளித்தார்.
“நவம்பர் 16 தேதியிட்ட நெகிரி செம்பிலான் முதலமைச்சர் பதவி விலகல் கடிதம் தொடர்பான செய்திகளை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அந்தக் கடிதத்தைத் துவாங்கு முஹ்ரிசிடம் சமர்ப்பிக்கவும் இல்லை, சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்கவும் இல்லை,” என்று அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஆட்சியாளர் முஹ்ரிசைச் சந்திப்பதற்காக திரு இஸ்மாயில் உள்ளூர் நேரப்படி காலை 10.17 மணிக்கு ஹிங்காப் அரண்மனைக்கு வந்தடைந்தார்.
ரெம்பாவ், சுங்கை உஜோங், ஜெலெபு ஆகிய வட்டாரத் தலைவர்களான ஹசன் அப்துல் ஹமீத், முஹம்மது ஃபாரிஸ் ஜோஹரி, அஸ்ரின் கைரி ஆகியோரும் அந்த அரண்மனையில் இருந்தனர். மாநிலத்தில் நான்கு வட்டார்த் தலைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கவும் நீக்கவும் அதிகாரம் உண்டு.
நவம்பர் 16ஆம் தேதியன்று, ஜுவாசே சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் திரு இஸ்மாயில், நெகிரி செம்பிலான் முதல்வர் பதவியை துறந்ததாகச் செய்திகள் வெளியாகின. அவர் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் அரண்மனை நவம்பர் 17ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 1959ஆம் ஆண்டு சட்டங்கள், அரசியலமைப்பின்படி, ஒரு முதல்வரின் பதவி விலகல் என்பது மாநில ஆட்சியாளர் முஹ்ரிசின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில், ஆட்சியாளர் முஹ்ரிஸ், திரு இஸ்மாயிலைச் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி அளித்தார். இந்தச் சந்திப்பு மாலை சுமார் 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது என்று பெர்னாமா தெரிவித்தது.
