ஈரானுக்குள் அமெரிக்க ராணுவம் நுழையக்கூடும் எனும் விழிப்புநிலையில் இஸ்ரேல்

2 mins read
3d8852a3-f1e1-4dc7-a1dc-21175ae1f203
டெல் அவிவ் நகரக்காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

டெஹ்ரான்: ஈரானில் அமெரிக்க ராணுவப் படையினர் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையுடன் இஸ்ரேல் உச்சபட்ச விழிப்புநிலையில் இருக்கிறது.

பல்லாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் கையாளும் நேரத்தில் இந்நிலை நிலவுவதாக இஸ்ரேலியத் தரப்புகள் கூறிவருகின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை அடக்குவதற்குத் தொடர்ந்து வன்முறை பயன்படுத்தப்படுவது தொடர்பாக ஈரானிய அரசுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கடந்த சில நாள்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறார். அவர்களுக்குத் துணைநிற்க அமெரிக்கா தயாராக நிற்பதாகத் திரு டிரம்ப், சனிக்கிழமை (ஜனவரி 10) தெரிவித்தார்.

தீவிரப்படுத்தப்பட்டுள்ள விழிப்புநிலையின் விளைவாக இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளிவரவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேலும் ஈரானும் 12 நாள்களாகப் போரில் ஈடுபட்டன.

சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பில், ஈரானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியம் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.

இந்த உரையாடல் நிகழ்ந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ள போதிலும், என்னென்ன தலைப்புகளில் அவர்கள் பேசினர் என்பது குறித்து விவரிக்கவில்லை. ஈரானின் ஆர்ப்பாட்டப் பிரச்சினையில் இஸ்ரேல் தலையிட விரும்புவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை இஸ்ரேல் தரப்பிலிருந்து தென்படவில்லை.

இருந்தபோதிலும் ஈரானின் அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பில் அவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. “ஈரான் இஸ்ரேலைத் தாக்க முற்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்,” என்று திரு நெட்டன்யாகு தெரிவித்தார். “அதுமட்டுமன்றி, ஈரானுக்குள்ளேயே என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்,” என அவர் ஆர்ப்பாட்டங்களைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஈரானிய அதிகாரிகள் அந்நாட்டின் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது காட்டும் கடுமை காரணமாகப் பெருகிவரும் மரண எண்ணிக்கை குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. ஈரானில் இணையம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளில் பல்லாயிரக்கணக்கானோர் சாலைகளில் அணிவகுத்துச் செல்வதும், ரத்தம் தோய்ந்த சடலங்கள் வீழ்ந்து கிடப்பதும் தென்படுகின்றன.

அடக்குமுறை நடவடிக்கைகளால் ஏறக்குறைய 65 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர் அமைப்பு தெரிவித்தது. அத்துடன் 2,311 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரானை முன்னர் ஆட்சி செய்த காலஞ்சென்ற மன்னரின் மகன் ரெஸா பஹ்லவி, ஆர்ப்பாட்டங்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமய போதகர் ஆட்சிக்கு முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்