காஸாவில் கிட்டத்தட்ட ஈராண்டாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ் தரப்பும் அக்டோபர் 6ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன.
அனைத்து பிணையாளிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மெச்சியதை அடுத்து அந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
பாலஸ்தீனக் கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலியக் கைதிகளை விடுவிப்பது குறித்து இஸ்ரேலும் ஹமாஸும் கலந்துரையாடுவதற்கு முக்கிய மத்தியஸ்த நாடான எகிப்து கைகொடுக்கும் என்று தெரிவித்தது.
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃபும் திரு டிரம்ப்பின் மருமகன் ஜேரட் குஷ்னரும் எகிப்துக்குப் புறப்படுகின்றனர்.
போரை முடிவுக்குக் கொண்டுவர திரு டிரம்ப் முன்வைத்த 20 அம்சத் திட்டம் குறித்த சில அம்சங்கள் பற்றிப் பேசவேண்டும் என்று ஹமாஸ் தரப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரு விட்கோஃபும் திரு குஷ்னரும் எகிப்துக்குச் செல்கின்றனர்.
அந்த 20 அம்சத் திட்டத்தில் சண்டையை உடனடியாக நிறுத்துவதோடு கட்டங்கட்டமாக இஸ்ரேல் வீரர்களைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்வது, கைதிகளையும் பிணையாளிகளையும் விடுவிப்பது ஆகியவை அடங்கும்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ புதிய உடன்பாட்டை வரவேற்றபோதும் அது இறுதியானதன்று என்று எச்சரித்தார்.
“பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் முதற்கட்டமாக அதன் வீரர்களை மீட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டது. அதை ஹமாஸுடன் பகிர்ந்துகொண்டோம்,” என்று திரு டிரம்ப் தமது சமூக ஊடகப் பக்கத்தில் அக்டோபர் 4ஆம் தேதி பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஹமாஸ் அதை உறுதிசெய்த பிறகு உடனடியாக சண்டை நிறுத்தப்படும், பிணையாளி, கைதிகள் பறிமாற்றம் இடம்பெறும், வீரர்களை மீட்பதற்கான அடுத்த கட்டம் தொடங்கும் என்றார் திரு டிரம்ப்.
இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எப்போது பிணையாளிகள் விடுவிக்கப்படுவார்கள் எந்தெந்த பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்பதில் கவனம் செலுத்தும் என்று கான் நியூஸ் செய்தித்தளம் குறிப்பிட்டது.
ஹமாஸ் தரப்பு ஒருவழியாக நீண்டகால அமைதிக்குத் தயார் என்று நம்புவதாகத் திரு டிரம்ப் சொன்னார்.