ஜெனீவா: இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டை நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லெபனானின் தென்பகுதியில் இஸ்ரேல் வான்வழியாக நடத்திய தொடர் தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லாவின் எதிர்தாக்குதலில் இஸ்ரேலியப் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர்.
மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது. இஸ்ரேலிய-லெபனானிய மோதல் அதனைக் கீழறுத்துவிடுமோ என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில், சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
சண்டை நிறுத்தம் நடப்பிலிருப்பதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிசெய்தது. இருப்பினும், உடனடி அச்சுறுத்தல்களை அகற்றும் பணிகளில் தங்கள் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர் என்று அதன் பேச்சாளர் கூறினார்.
சண்டை நிறுத்தத்தை ஹிஸ்புல்லா இன்னும் உறுதிசெய்யவில்லை. ஆயினும், ஹிஸ்புல்லாவை அகற்றவேண்டும் என்ற திட்டம் தோல்வியடைந்ததாக அதன் தலைமைச் செயலாளர் ஷேக் கூறினார்.
சண்டை நிறுத்தம் தொடங்கிய பிறகு, லெபனானின் நபட்டியா நகரில் 12 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மீட்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானுடனான அமைதி உடன்பாட்டின் எதிர்காலம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அந்தத் தாக்குதல்கள் காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
தென்லெபனானில் நடத்தப்பட்ட அண்மைத் தாக்குதல்கள் அதிகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சண்டை நிறுத்தம் நடப்பிலிருப்பதாக வெள்ளை மாளிகை சொல்கிறது. ஆனால் இஸ்ரேலியப் படையினர் மாண்டது குறித்து அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இத்தமார் பென் குவீர் கோபத்துடன் கருத்துரைத்துள்ளார்.
“லெபனான் பற்றியெரிய வேண்டும்... இஸ்ரேலியத் தாய் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் லெபனானின் 1,000 அம்மாக்கள் அழவேண்டும்,” என்று அவர் கூறினார்.
அதற்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி பதில் கொடுத்தார். இஸ்ரேல், நிரந்தரப் போரை விரும்புவதாக அவர் குற்றஞ்சாட்டினார். புரிந்துணர்வுக் குறிப்பில் இடம்பெற்றுள்ள உறுதிமொழிகள் மீறப்பட்டால் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்றார் ஈரானிய அமைச்சர்.
இரு தரப்பும் தீவிரப்போக்கைப் பின்பற்றுவோரைக் கட்டுப்படுத்தி, அமைதியான முறையில் நடந்துகொள்வதையே திரு டிரம்ப்பின் உடன்பாடு நம்பியிருக்கிறது. ஆனால் அதற்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

