மேற்குக் கரையில் கூடுதல் குடியிருப்புகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்

2 mins read
fd0726eb-2b05-4df0-afa0-27bcdbaf5721
இஸ்ரேலிய நிதியமைச்சர் பெஸலெல் ஸ்மோட்ரிக், மேற்குக் கரையில் குடியிருப்புகளை விரிவுபடுத்துவது குறித்துச் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்

டெல் அவிவ்: இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியிருப்புகளை அமர்த்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கம் அங்குப் புதிய குடியிருப்புகளை விரிவுபடுத்தும் பணிகளை முனைப்புடன் தொடர்கிறது.

பாலஸ்தீனத் தனிநாடு உருவாவதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே அண்மை முடிவு எடுக்கப்பட்டதாகச் செய்தியாளர் கூட்டத்தில் இஸ்ரேலின் வலசாரி நிதியமைச்சர் பெஸலெல் ஸ்மோட்ரிக் கூறினார். அத்தகைய குடியிருப்புகளுள் ஒன்றில் வசிப்பவரான அவர் அதனைத் தெரிவித்தபோது தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்சும் அருகில் இருந்தார்.

அனைத்துலகச் சட்டத்தின்கீழ், மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகளை நிறுவினால் அவை சட்டவிரோதமாகக் கருதப்படும்.

சவூதி அரேபியா, இஸ்ரேலின் முடிவைக் கண்டித்தது. இஸ்ரேல் தீவிரமாகக் குடியிருப்புகளை விரிவுபடுத்துவது பதற்றத்தை அதிகரிக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் கூறினார். பாலஸ்தீனர்கள் மேற்குக் கரைக்குச் செல்வதை இஸ்ரேலின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தும் என்றும் அரசுரிமை பெற்ற பாலஸ்தீனத் தனிநாடு அமைவதற்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஸா போர் தொடங்கியதிலிருந்தே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறை பெருகியுள்ளது. குடியிருப்புகளை விரிவுபடுத்துவது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை மேலும் உறுதிப்படுத்துவதோடு இரு நாட்டுத் தீர்வுக்கான முயற்சிகளைக் கீழறுக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

இரு நாட்டுத் தீர்வு என்பது, மேற்குக் கரையிலும் காஸா வட்டாரத்திலும் பாலஸ்தீனத் தனிநாடு உருவாவதைக் குறிக்கிறது. அவ்வாறு அமைந்தால் கிழக்கு ஜெருசலம் தலைநகராக இருக்கும். 1967ஆம் ஆண்டு நடந்த அரேபிய-இஸ்ரேலியப் போருக்கு முந்திய காலத்தில் இருந்த நிலைக்குத் திரும்ப அது வழிவிடக்கூடும் என்று நம்பப்படுகிறது.

2022ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்தே தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் புதிய குடியிருப்புகளுக்கான ஒப்புதல்களைக் கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்