ஜெருசலம்: ஈரான்மீது இஸ்ரேல் சனிக்கிழமையன்று (அக்டோபர் 26) தாக்குதல் நடத்தியது.
அண்மையில் இஸ்ரேல்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்தகுதல் அமைவதாக இஸ்ரேல் கூறியது.
ஹிஸ்புல்லா அமைப்பின் அப்போதைய தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதை அடுத்து, அக்டோபர் 1ஆம் தேதியன்று இஸ்ரேல்மீது ஈரான் ஏறத்தாழ 200 ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
இந்நிலையில், ஈரானிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஈரானிடமிருந்தும் அதன் ஆதரவில் செயல்படும் அமைப்புகளிடமிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாக அது கூறியது.
“எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆற்றல்கள் முழுமையாக இயக்கிவிடப்பட்டுள்ளன,” என்று இஸ்ரேலியத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்நிலையில், ஈரானியத் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அருகில் உள்ள ராணுவத் தளங்களிலும் பல மணி நேரத்துக்கு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் ஈரானிய நேரப்படி அதிகாலை சுமார் 2 மணிக்குத் தொடங்கியதாக தகவல் வெளியிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பொழுதுவிடவற்கு முன்பு பல தாக்குதல்களை நடத்திவிட்டதாக இஸ்ரேல் கூறியது.
இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை தனது வான் தற்காப்புக் கட்டமைப்பு வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் மட்டுமே சிறிதளவு சேதம் ஏற்பட்டதாக அது கூறியது.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானை நோக்கி விரைந்த பல இஸ்ரேலிய ஏவுகணைகளை ஈரானிய வான் தற்காப்புக் கட்டமைப்பு சுட்டு வீழ்த்துவதைக் காட்டும் காணொளிகளை ஈரானிய ஊடகம் வெளியிட்டது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு முன்பு இஸ்ரேல் அதுகுறித்து தன்னிடம் தகவல் தெரிவித்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
ஆனால் ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.