லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு; ஈரானின் பதிலடித் தாக்குதல் நீடிப்பு

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு; ஈரானின் பதிலடித் தாக்குதல் நீடிப்பு

2 mins read
0a0eba5c-9efa-4883-88f0-f7f964a47138
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கே புறநகர்ப் பகுதியில் திங்கட்கிழமை (மார்ச் 2) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிதையுண்ட கட்டடங்கள். - படம்: ஏஎஃப்பி

இஸ்ரேலியப் படைகள் லெபனானில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி உள்ளன. திங்கட்கிழமை காலையில் ஹிஸ்புல்லா போராளிக்குழு ஏவுகணைத் தாக்குதல் தொடுத்த பின்னர் இஸ்ரேல் பெய்ரூட்டைக் குறி வைத்துத் தாக்கியதாக ஊடகங்கள் கூறின.

ஈரானின் உச்சநிலைத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, டெஹ்ரானின் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய ஷியா முஸ்லிம் இயக்கமான ஹிஸ்புல்லா, இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசியது.

அதனைத் தொடர்ந்து பெய்ரூட் உட்பட லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தின.

அந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் மாண்டுவிட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் ஈரானைத் தாக்கிய பின்னர் தற்போது அவற்றின் கவனம் ஹிஸ்புல்லாவின் பக்கம் திரும்பி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்சநிலைத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஓராண்டுக்கு முன்னர் ஹிஸ்புல்லா குழு தெரிவித்த பின்னர் திங்கட்கிழமை நடத்தப்பட்டிருக்கும் முதல் தாக்குதல் ஆகும்.

காமெனி கொல்லப்பட்டதற்குப் பதிலடி தருவதற்காக இஸ்ரேலைத் தாக்கி இருப்பதாக ஹிஸ்புல்லாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அதேநேரம் லெபனானைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. அந்தத் தாக்குதலில் காயம், சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஊடகங்கள் கூறின.

இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக இறங்கவேண்டாம் என்று ஹிஸ்புல்லா குழுவை லெபனான் அரசாங்கம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

“மத்திய கிழக்கு வட்டாரத்தில் நடைபெறும் ராணுவ மோதல்களில் இருந்து லெபனானை விலக்கி வைப்பதை தமது அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது,” என்று லெபனான் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலையும் குவைத்தையும் குறிவைத்து ஈரானியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதனால், நெட்டன்யாகுவின் கதி பற்றி கேள்வி எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்