ஜெருசலம்/கெய்ரோ: ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலியரான திருவாட்டி ஷிரி பிபாஸ் உடல் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
பிணைக்கைதியான ஷிரி பிபாஸின் சடலத்திற்குப் பதிலாக அடையாளம் தெரியாத மற்றொருவரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்துவிட்டதாக இஸ்ரேல் கூறியதால் வெள்ளிக்கிழமை அன்று (பிப்ரவரி 21) மற்றோர் உடல் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக ஹமாஸ் போராளிகளால் ஒப்படைக்கப்பட்டது.
இஸ்ரேலில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) நடத்தப்பட்ட அடையாளம் காணும் சோதனையில் ஒப்படைக்கப்பட்ட உடல், ஷிரி பிபாசினுடையது தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
பாலஸ்தீனப் போராளிக் குழு, காஸா சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ் திருமதி ஷிரி பிபாஸ், அவரது இரண்டு இளம் மகன்கள் கஃபிர், ஏரியல் ஆகியோரின் உடல்களையும் நான்காவது பிணைக் கைதியின் உடலையும் பிப்ரவரி 20ஆம் தேதி ஒப்படைத்தது.
நான்கு சடலங்களில் பிபாஸின் இரண்டு மகன்கள் அடையாளம் காணப்பட்டனர். மூன்றாவது சடலம் ஓடெட் லிஃப்ஷிட்ஸ் என்றும் அடையாளம் காணப்பட்டது. ஆனால் நான்காவது சடலம் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல். அந்த உடல் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது கடத்தப்பட்ட திருவாட்டி ஷிரி பிபாஸ் அல்ல என்று இஸ்ரேலிய தடயவியல் நிபுணர்கள் கூறினர். ஷிரி பிபாஸின் இரு இளம் மகன்களும் அவரது கணவர் யார்டன் பிபாஸ் ஆகியோரும் அச்சமயத்தில் கடத்தப்பட்டனர்.
ஹமாஸ் அரசியல் பிரிவின் உறுப்பினரான பாசெம் நயிம், இது துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட தவறு என்று தெரிவித்தார். இஸ்ரேலியக் குண்டுவீச்சில் பிணைக்கைதிகள், பாலஸ்தீனர்களின் உடல்கள் கலந்ததால் ஏற்பட்டிருக்கலாம். இன்னும் இடிபாடுகளில் பல ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
“நாங்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கைக்கு, ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படாமல் இருப்பது அல்லது எந்தவொரு உடலையும் வைத்திருப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை,” என்று அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்தார்.
தவறான உடல் ஒப்படைக்கப்பட்டதால் இஸ்ரேலிய மக்கள் கொதிப்படைந்தனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு மற்றொரு தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டது. சண்டை நிறுத்த ஒப்பந்தமும் முறிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
திருமதி ஷிரி பிபாஸ் குழந்தைகளின் உடல்களை உளவுத்துறையும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்ததில் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டவர்களால் வேண்டுமென்றே கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ஆனால் மேல் விவரம் எதையும் அது வெளியிடவில்லை.
ஆனால் இஸ்ரேலிய குண்டுவீச்சில் அவர்கள் இறந்துவிட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் அலுவலகமும் இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் மேலும் இஸ்ரேலில் ஆறு பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது. காசாவில் இரு வெவ்வேறு இடங்களில் அவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் சுமார் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.