டெஹ்ரான்: டெஹ்ரான் மீதும் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) தாக்குதல் நடத்தியது.
மற்றொரு பக்கம் பாக்தாத் மீதும் அது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு போருக்குள் ஈராக்கும் இழுத்துவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தத் தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பாக்தாத் நகர் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது.
பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை நோக்கிய தாக்குதல் அது என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
மூன்றாவது வாரமாக நீடிக்கும் ஈரான் போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர்.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் வேளையில் லெபனானையும் இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை.
பெய்ரூட்டின் தென்பகுதி புறநகரில் உள்ள குடியிருப்புக் கட்டடங்கள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியதாக லெபனான் அரசு ஊடகம் கூறியது.
தாக்குதல் நடத்தப்பட்ட பெய்ரூட் நகர், ஈரானின் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையாகும்.
தொடர்புடைய செய்திகள்
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஏராளமான லெபனான் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். மார்ச் 2ஆம் தேதி முதல் அவர்கள் வெவ்வேறு பகுதிகளை நோக்கிச் சென்று வருகின்றனர். தற்போது வரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் இடம்பெயரப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 600 காப்பகங்களில் 130,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அதற்குப் பழிவாங்குவதற்காக ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது தாக்கத் தொடங்கினர். அதனைச் சமாளிக்க லெபனான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது, ஈராக்கும் போர் வளையத்திற்குள் இழுத்து விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மறைமுகப் போர்க்களமாக இதுவரை இருந்து வந்த ஈராக், தற்போது நேரடித் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே உலகளாவிய எண்ணெய் விலைகள் 40 விழுக்காட்டுக்கும் மேலாக உயர்ந்துள்ளன. மேலும் அந்த விலை உயர்வின் தாக்கம் உலகளவில் உணரப்பட்டுள்ளது.
போரினால் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டதைச் சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

