வாஷிங்டன்: இஸ்ரேல் இந்த ஆண்டு மத்தியில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது தாக்குதலைத் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பல்வேறு உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு புதன்கிழமை (பிப்ரவரி 12), இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அத்தகைய தாக்குதல், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைச் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பாதிக்கும் என்றும் இதனால் அந்த வட்டாரத்திலும் உலக அளவிலும் பதற்றம் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் இறுதிக்கட்டத்திலும் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தொடக்ககாலத்திலும் தயாரிக்கப்பட்ட உளவுத் தகவல்கள் அவ்வாறு கருதுவதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
அந்த அறிக்கைகளை உடனடியாக உறுதிசெய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
வெள்ளை மாளிகை இதுகுறித்துக் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
இஸ்ரேலிய அரசாங்கம், அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை (CIA), தற்காப்பு உளவு அமைப்பு, தேசிய உளவுப்பிரிவு இயக்குநர் அலுவலகம் ஆகிய தரப்புகளும் கருத்துரைக்க மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
ஈரான் அணுவாயுதம் பெறுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுமதிக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் பிரையன் ஹக்ஸ் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டிடம் கூறினார்.
இந்த நீண்டகால விவகாரத்துக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண திரு டிரம்ப் விரும்பினாலும் ஈரான் இதன் தொடர்பில் விரைந்து இணக்கம் காணாவிட்டால் காலவரையறை இன்றி அதிபர் காத்திருக்க மாட்டார் என்றார் திரு ஹக்ஸ்.
இந்நிலையில், ஈரானின் ஃபார்தோவ், நடான்ஸ் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஜனவரி மாதம் வெளியான விரிவான உளவுத் தகவலறிக்கைகள் எச்சரிக்கின்றன.
அத்தகைய தாக்குதல்களில் அமெரிக்கா, போர் விமானங்களுக்கு விண்ணிலேயே எரிபொருள் நிரப்பும் சேவை, உளவுத் தகவல்கள் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் ஆதரவு அளிக்கும் என்றும் கருதப்படுகிறது.
திரு பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் நடத்திய பேச்சுவார்த்தை மூலம், ஈரான் அதன் அணுசக்தித் திட்டங்களை நிறுத்துவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.
ஆனால் 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிபரான திரு டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தூண்டுதலின் பேரில் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதையடுத்து ஈரான் அதன் அணுசக்தித் திட்டங்களை மீண்டும் தொடங்கியது.