ஜெருசலம்: ஹிஸ்புல்லா போராளி அமைப்புக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானின் பெரும் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாகவும் 600,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்புவதைத் தடுக்கப்போவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், “இஸ்ரேலிய எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டானி ஆறு வரையிலான ஒட்டுமொத்த பகுதியையும் கட்டுப்படுத்தி, லெபனானுக்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை இஸ்ரேலிய ராணுவம் நிறுவும்,” என்றார்.
இப்பகுதியில் நிலவும் போரினால் வெளியேறியவர்கள், இஸ்ரேலின் வடக்கு பகுதி குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் திரு காட்ஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் இடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரானுடன் போர் தொடங்கியதிலிருந்து, ஹிஸ்புல்லாவை அழிப்பதற்காகத் தெற்கு லெபனான் மற்றும் லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டின் சில பகுதிகளில் இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தி வருகிறது.
லெபனான் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, தாக்குதல்கள் காரணமாக இதுவரை ஏறத்தாழ 1,250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, போர் தொடங்கிய முதல் நாளன்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது. இது இஸ்ரேலின் பதில் தாக்குதலுக்கு வழிவகுத்ததுடன், 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இருதரப்புக்கும் இடையே நிலவி வந்த பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

