ஹிஸ்புல்லாவின் நிலத்தடிக் கட்டமைப்பைத் தகர்த்தது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவின் நிலத்தடிக் கட்டமைப்பைத் தகர்த்தது இஸ்ரேல்

1 mins read
cd20400f-af49-494d-becf-23e35a713957
லெபனானில் சேதமடைந்த கட்டடங்களுக்கு இடையே சென்ற இஸ்ரேலின் ராணுவ வாகனங்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

கைரோ: லெபனானின் தென்பகுதியில் உள்ள நிலத்தடிக் கட்டமைப்பை இஸ்ரேலிய ராணுவம் தகர்த்துள்ளது.

ஒரு கிராமத்தில் இருந்த கட்டமைப்பை லெபனானின் கிளர்ச்சிக் குழுவான ஹிஸ்புல்லா பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.

நிலத்தடிக் கட்டமைப்பு அழிக்கப்பட்ட தகவல், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்சும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வெளியிட்ட கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

நிலத்தடித் தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகக் கூட்டறிக்கை குறிப்பிட்டது. மஜ்தல் ஸூன் எனும் நகரில் 200 மீட்டர் நீளம்கொண்ட நிலத்தடிச் சுரங்கம் குறிவைக்கப்பட்டது.

சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் ஏவுகணைகளைப் பாய்ச்சுகின்ற கருவிகளும் இருந்ததாகக் கூறப்பட்டது.

அதற்குச் சிலமணிநேரம் முன்பு இன்னொரு தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. தென்லெபனானின் நபாட்டியே வட்டாரத்தில் எறிபடைகளால் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வைத்திருந்த ஹி‌ஸ்புல்லா படையினரையும் ஏவுகணைகளைப் பாய்ச்சும் கருவியையும் தாக்கியதாக அது சொன்னது.

சண்டை நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் அப்பட்டமாய் மீறியிருப்பதாக ஹிஸ்புல்லா குழு தெரிவித்தது. இதுவரை அதனைக் கடைப்பிடித்துள்ளதாகவும் அத்தகைய அத்துமீறல்களை அணுக்கமாய்க் கண்காணித்துவருவதாகவும் அக்குழு கூறியது. தங்களின் தாயகத்தையும் குடிமக்களையும் பாதுகாக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்