டெல் அவிவ்: இஸ்ரேலில் அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.
அத்தாக்குதலுக்குப் பிறகு நெட்டன்யாகுவின் தலைமைத்துவம் குறித்து அந்நாட்டு மக்களிடையே நடத்தப்படும் வாக்கெடுப்பாகவே அத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
அண்மைய கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 120 இடங்களில் ஐசன்கோட்டின் புதிய ‘யாஷர்’ கட்சி 22 இடங்களையும் நெட்டன்யாகுவின் ‘லிக்குட்’ கட்சி 24 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், 43 விழுக்காட்டினர் 66 வயது ஐசன்கோட்டைப் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என ஆதரித்துள்ளனர்.
நெட்டன்யாகுவுக்கு 34 விழுக்காடு ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ராணுவத் தளபதியாக இருந்த ஐசன்கோட், பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு, மக்களாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவது ஆகியவற்றைத் தம் தேர்தல் முழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஹமாஸ் தாக்குதல் குறித்து அரசாங்கக் குழு விசாரணை நடத்த வேண்டும், பழைமைவாத யூதர்கள், அரபு குடிமக்களுக்குக் கட்டாய ராணுவச் சேவை சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் போன்றவை அவரின் முக்கிய வாக்குறுதிகளாகும்.
நீதிமன்றச் சுதந்திரம், சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள அவர், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மொராக்கோ யூதக் குடியேறிகளின் மகனான ஐசன்கோட்டிற்கு மக்களின் பேராதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, காஸா போரில் இவரது மகனும் இரு மருமகன்களும் உயிரிழந்தது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டன்யாகுவின் தற்போதைய கூட்டணியின்மீது கடும் அதிருப்தியில் உள்ள வலதுசாரி, நடுநிலைவாத வாக்காளர்களைக் கவரும் வகையில் ஐசன்கோட்டின் பொறுப்பான, அமைதியான அணுகுமுறை அமைந்துள்ளது.
தற்போதைய சூழலில் நெட்டன்யாகுவை எதிர்த்துப் போட்டியிடும் முதன்மை எதிர்க்கட்சி வேட்பாளராக ஐசன்கோட் பார்க்கப்படுகிறார்.

