ராஃபா: இஸ்ரேலின் ராணுவப் படை மே 26ஆம் தேதி காஸாவைத் தாக்கியது.
இருப்பினும், எதிர்வரும் நாள்களில் சண்டைநிறுத்தம், பிணைக்கைதிகளின் விடுதலை ஆகியவற்றை நோக்கி அரசதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸாவின் வடக்கு, மத்திய, தெற்குப் பகுதிகளில் இரவு முழுதும் ஆகாயத் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் நடத்தப்பட்டன.
எஞ்சியுள்ள இறுதி ஹமாஸ் உறுப்பினர்கள் இருக்கும் ராஃபா நகரில் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக அனைத்துலக அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளபோதும், அவர்களை அழிக்கப்போவதாக இஸ்ரேல் உறுதிதெரிவித்துள்ளது.
மே தொடக்கத்திலிருந்து இஸ்ரேல் அங்குத் தாக்குதல் நடத்திவருவதால், எகிப்து அதன் பக்கம் உள்ள ராஃபா எல்லைப்பகுதியை மூடிவிட்டது. இருப்பினும், மே 26ஆம் தேதி, எகிப்திலிருந்து உதவி வாகனங்கள் காஸாவுக்குள் நுழைந்தன.
இந்நிலையில், பிணைக்கைதிகளை வீட்டுக்கு அனுப்பும் உடனடிச் சண்டைநிறுத்தத்தை ஏற்படுத்த, அவசர அரசதந்திர முயற்சியில் தமது நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.
சண்டைநிறுத்தப் பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான அதன் முயற்சிகளைத் தொடர்வதாக எகிப்து தெரிவித்துள்ளதாக, அல் கஹிரா செய்தி நிறுவனம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பாரிசில் கத்தார் சமரசப் பேச்சாளர்களுடனும், அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவருடனும் இஸ்ரேலியப் புலனாய்வு அமைப்பின் தலைவர் டேவிட் பார்னியா, சண்டைநிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான புதிய கட்டமைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்தது.
இந்த வாரம் அந்தப் பேச்சுகளை மீண்டும் நடத்தத் திட்டம் உள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இருப்பினும், இந்த விவகாரத்தின் தொடர்பில் இதுவரை எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை என்றும் இஸ்ரேலியத் தரப்பிடமிருந்து வெறும் பேச்சு மட்டுமே நடைபெறுவதாகவும் ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்டான், கத்தாரின் அல் ஜஸீரா கட்டமைப்பிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், பிணைக்கைதிகளின் தொடர்பில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் அதிக நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
மே 25ஆம் தேதி, டெல் அவிவில் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் நடைபெற்றன.
அண்மைய நாள்களில், காஸாவிலிருந்து ஏழு பிணைக்கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இதனால் எஞ்சியுள்ள பிணைக்கைதிகளின் உறவினர்களின் அச்சமும் வலியும் அதிகரித்துள்ளன.