தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பற்றி எரியும் காஸா நகரங்கள்

1 mins read
08248d03-000b-4263-80b6-e6696392bef1
தென் காஸாவின் ராஃபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, எரிந்துகொண்டிருக்கும் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மற்றவர்கள் தேடுவதை மக்கள் பார்க்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேலிய ராணுவம், தென் காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மீது புதன்கிழமை (டிசம்பர் 6) கடுமையாக தாக்குதல் நடத்தியது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நீடிக்கும் இப்போரால் அங்குப் பொது ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிடும் என ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

தெற்கு காஸாவின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிசின் முக்கியப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம், ஆயுதம் ஏந்திய படையினர், கவச வாகனங்கள் ஆகியவை நுழைந்துள்ளதால் அங்கு இடம்பெயர்ந்துள்ள குடிமக்கள் மீண்டும் வேறு இடங்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய ராணுவம் கான் யூனிஸ் நகருக்குள் நுழைவதைத் தடுக்க தாங்கள் போராடி வருவதாக ஹமாஸ் தரப்பும் மற்றொரு பாலஸ்தீன போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்தும் ஏஎஃப்பியிடம் கூறின.

ஆனால் இதை இஸ்ரேலிய ராணுவம் மறுத்துள்ளது. தான் அந்நகரின் மையப் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிட்ட சில இலக்குகளை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் அது தெரிவித்தது.

அங்கு 30 சுரங்கப்பாதைகளைக் கண்டுபிடித்து அவற்றை அழித்துவிட்டதாகவும் அது குறிப்பிட்டது.

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டை இஸ்ரேலிய ராணுவம் நெருங்கிவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காணொளி ஒன்றில் தெரிவித்தார்.

“நாங்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம், மனதளவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுக்கு ஒரு தீர்வை யாராவது கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சூழ்நிலையிலிருந்து நாங்கள் வெளியேற முடியும்,” என இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிய கான் யூனிஸ் குடியிருப்பாளர் அமல் மஹ்தி கூறினார்.

குறிப்புச் சொற்கள்