தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டை நிறுத்தம் அநேகமாக நீட்டிக்கப்படும்

2 mins read
4f43d430-b76d-4c9f-9ec4-15c12307c261
இஸ்ரேல் எல்லை அருகே உள்ள கரையோரப் பகுதியான நகுராவில் சேதமடைந்துள்ள குடியிருப்பு. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஜெருசலம்: இஸ்ரேலுக்கும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே போரைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள சண்டை நிறுத்த உடன்பாடு, அடுத்த வாரம் காலாவதியாகும்போது அது அநேகமாக நீட்டிக்கப்படும் என்று இந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்தோர் கூறியுள்ளனர்.

நவம்பர் இறுதியில் நடப்புக்கு வந்த சண்டை நிறுத்தத்தின் நிபந்தனைகளை நிறைவுசெய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டாலும், இஸ்ரேலும் ஈரான் ஆதரவு கொண்டுள்ள ஹிஸ்புல்லாவும் போரை அநேகமாகத் தொடரமாட்டா எனப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள லெபனான், இஸ்ரேலிய, பிரெஞ்சு அரசாங்க அதிகாரிகள் கூறினர்.

பிரான்ஸ், அமெரிக்கா இரு நாடுகளின் ஆதரவைக் கொண்டுள்ள இந்த உடன்பாடு, தெற்கு லெபனான் கிராமங்களிலிருந்து வெளியேற இஸ்ரேலியப் படைகளுக்கு 60 நாள் அவகாசம் தந்துள்ளது.

அதேபோல, லிட்டானி ஆற்றுக்கு வடக்கிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும்.

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து, காஸாவில் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாசும் கடந்த வாரம் இணக்கம் கண்டன.

லெபனானில் சண்டை நிறுத்தம் நவம்பரிலிருந்து பரவலாக நடப்பில் இருந்து வந்தாலும், அதன் உடன்பாட்டை மீறுவதாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறி வருகின்றன.

இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமித்த கிராமங்களில் குறைந்தது பாதியளவில் அவை இன்னமும் உள்ளதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பூசல் மீண்டும் தொடங்காமல் இருப்பதை உறுதிசெய்ய, ஜனவரி 27ல் காலாவதியாக இருந்த சண்டை நிறுத்த உடன்பாட்டை நீட்டிக்க இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மூத்த இஸ்ரேலிய அரசதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

லிட்டானிக்கு வடக்கிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேறவும் லெபனான் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடவும் கூடுதல் அவகாசம் வழங்க, சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படும் என பிரெஞ்சு அதிகாரிகளும் லெபனானில் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து விவரமறிந்த ஒருவரும் தெரிவித்தனர்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அரசதந்திர உறவுகள் இல்லாததால், மத்தியஸ்தர்கள் இன்றி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர், இருநாட்டுப் பொருளியலுக்கும் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.

சண்டை நிறுத்த உடன்பாட்டிற்குத் தான் கடப்பாடு கொண்டுள்ளதாகப் பலமுறை கூறி வந்துள்ள லெபனான், இஸ்ரேல் அதன் படைகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவிடம் இன்னமும் ஏராளமான போராளிகளும் ஆயுதங்களும் இருந்தாலும், பூசலின்போது அது கடுமையாகப் பலவீனமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்